நாட்டின் எதிர்காலமான சிறார்களை பள்ளிக்கு அனுப்பாமல், வறுமை, கடன் உள்ளிட்ட காரணங்களால் வேலைக்கு அனுப்பி, அவர்களை குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றும் பழக்கத்தை தடுக்க, கடந்த 1986-ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல் சட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர், 2006-ம் ஆண்டு இச்சட்டம் திருத்தியமைக்கப்பட்டது. அதன்படி, 5 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை எந்தவித பணியிலும் ஈடுபடுத்தக்கூடாது. 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட வளரிளம் பருவ சிறார்களை, கடினமான வேலை கொண்ட பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது.
உலகளவில் 16 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாகவும், அதில் 9 கோடி குழந்தைத் தொழிலாளர்கள் ஆபத்தான வேலைகளை செய்வதாகவும் சர்வதேச அமைப்பு ஒன்றின் சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது. கோவை மாவட்ட நிர்வாகத்தினரின் புள்ளிவிவரப்படி, தொழில் வளம் மிகுந்த கோவையில், 2020-21-ம் ஆண்டில் இதுவரை 13 சிறார்கள் மீட்கப்பட்டுள்ளனர். 2019-20-ல் 50 பேரும், 2018-19-ல் 12 பேரும், 2017-18-ல் 13 பேரும், 2016-17-ல் 5 பேரும் மீட்கப்பட்டுள்ளனர்.
கோவையில் பெரிய தொழிற்சாலைகள், தொழிற்கூடங்கள், இயந்திர உதிரி பாக தயாரிப்பு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. இங்கு சிறார்களை பணியில் ஈடுபடுத்துவது தொடர்கிறது. அதிகாரிகளின் சோதனையிலும் இது உறுதியாகிறது.
சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது,‘‘ கரோனா தொற்று பரவலுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளின் காரணமாக, குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திடாமல் தடுத்திட மாவட்ட நிர்வாகத்தினர் தொடர்ச்சியாக ஆய்வுப் பணியை மேற்கொள்ள வேண்டும். பள்ளிகளில் இடைநின்ற மாணவர்களின் நிலையை அறிய வேண்டும். வேறு வழியின்றி வேலைக்கு செல்லும் 15 முதல் 18 வயது வரையுள்ள வளரிளம் பருவத்தினர், அனுமதிக்கப்பட்ட வேலைகளில் தான் ஈடுபடுத்தப்படுகின்றனரா என ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றனர்.
தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தின் கோவை மாவட்ட உயர் அதிகாரி கூறும்போது,‘‘குழந்தைத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதை தடுக்க,அதிகாரிகள் குழுவினர் தொடர் சோதனையில் ஈடுபடுகின்றனர். இக்குழுவில் குழந்தைத் தொழிலாளர் தடுப்புப் பிரிவினர், வருவாய், காவல், தொழிலாளர், தொழிலக பாதுகாப்பு, சைல்டு லைன், குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு அலுவலர்கள் உள்ளனர். இக்குழுவினர் மூலம் 2020-21-ம் ஆண்டில் 77 இடங்களிலும், 2019-20-ல் 55 இடங்களிலும், 2018-19-ல் 50 இடங்களிலும், 2017-18-ல் 36 இடங்களிலும், 2016-17-ல் 29 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இச்சோதனையில் குழந்தைத் தொழிலாளர்கள், கடுமையான பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட வளரிளம் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வயது உறுதிப்படுத்தப்பட்டு, கல்வி கற்க பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். இவர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது’’ என்றார்.