தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் கொட்டியது. இந்த ஆண்டு முன்கூட்டியே சாரல் சீஸன்தொடங்கியுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கரோனாபரவல் காரணமாக சாரல் சீஸன் காலத்தில் அருவிகளில் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போது, அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

நேற்று முன்தினம் இரவிலும்,நேற்று காலையில் இருந்தும் மேற்குத் தொடர்ச்சி மலையை யொட்டிய பகுதிகளில் அவ்வப் போது சாரல் மழை பெய்தது. இதனால், பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி உள்ளிட்ட அருவிகளில் நீர் வரத்து அதிகரித்தது. பிரதான அருவியில் தண்ணீர் பறந்து விழுந்தது. அதேவேளை, கற்கள், மரக்கட்டைகள் நீரில் அடித்து வரப்பட்டு கீழே விழுந்ததால் பாதுகாப்பு கருதி, பிரதான அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளுக்குச் சென்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளித்தனர். சில மணி நேரங்கள் கழித்து பிரதான அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் குண்டாறு அணை, அடவிநயினார் அணையில் தலா 2 மி.மீ., செங்கோட்டையில் 1 மி.மீ. மழை பதிவானது. இந்த ஆண்டு முன்கூட்டியே சாரல் சீஸன் தொடங்கியுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழக சுற்றுலாத் துறை உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என குற்றாலம் நகர மக்கள் வலியுறுத்தினர்.