தமிழகத்தில் அன்றாட கரோனா பாதிப்பு நேற்று (ஜன.4) மாலை நிலவரப்படி 2731 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் என்றும் அது தொடர்பான அறிவிப்புகள் இன்று வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் வழிபாட்டுத் தளங்களில் கட்டுப்பாடு, பள்ளி, கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் வகுப்புகளை நடத்துவது உள்ளிட்ட கெடுபிடிகளை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிகிறது. அண்டை மாநிலங்களில் இருந்து வருவோருக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை முடிவு அவசியம், எல்லைகளில் கண்காணிப்பை அதிகரித்தல், கரோனா பரிசோதனையை அதிகரித்தல், கரோனா தடுப்பூசி பணிகளை வேகப்படுத்துதல், ஜல்லிக்கட்டுப் போட்டிகளைப் பார்வையாளர் இன்றி நடத்துவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் கூறப்படுகிறது.
கரோனா பரவலால் ஏற்கெனவே டெல்லி, பஞ்சாப், கார்நாடகா மாநிலங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா மூன்றாவது அலைக்கான சூழல் உருவாகியுள்ளதாக தடுப்பூசி திட்டத்திற்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் தலைவர் மருத்துவர் என்.கே.அரோரா கூறியுள்ளார்.
முதல்வர் ஆய்வு: சென்னையில் நேற்று மாலை நிலவரப்படி 1489 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, கரோனா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் 504 ஆக்ஸிஜன் படுக்கைகள், 400 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 904 படுக்கை வசதியுடன் கோவிட் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு வருகிறது.
நேற்று, சென்னை வர்த்தக மையத்திற்கு நேரடியாக சென்று ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்த, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னை வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் கோவிட் சிகிச்சை மையத்தில் 11 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 ஆக்ஸிஜன் சேமிப்பு கலன்கள் மற்றும் தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.