புது டெல்லி: பசுமை தொழில்துறை மற்றும் பொருளாதார மாற்றங்களில் 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் உமிழ்வு இல்லாத நிலையை எட்டும் உறுதியுடன் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்து பேசுகையில் தெரிவித்தார்.

சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை இயக்கம் சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய வாழ்க்கை நடைமுறைகளை நோக்கமாக கொண்டுள்ளது என்றும், பசுமை வளர்ச்சி என்ற சித்தாந்தம் அமிர்த காலத்தில் நம்மை வழி நடத்துவதாகவும் நிதியமைச்சர் கூறினார்.

பசுமை ஹைட்ரஜன் இயக்கம்: தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கம் தொடர்பாக விளக்கிய நிதியமைச்சர், குறைந்த கார்பன் வெளியேற்றத்தை எட்டவும், புதைப் படிம எரிபொருள் இறக்குமதியை குறைக்கவும் இந்த இயக்கம் வகை செய்யும் என்று கூறினார். 2030-ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 5 மில்லியன் (50 லட்சம்) மெட்ரிக் டன் ஹைட்ரஜனை உற்பத்தி செய்ய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எரிசக்தி மாற்றம் மற்றும் சேமிப்புத் திட்டங்கள்: பெட்ரோலிய அமைச்சகத்தின் மூலம் மேற் கொள்ளப்படும் எரிசக்தி நடைமுறைகள் மாற்றம், கார்பன் வெளியேற்ற தவிர்ப்பு நடைமுறைகள் மற்றும் எரிசக்தி பாதுகாப்பு ஆகிய நடவடிக்கைகளுக்கான முன்னுரிமை மூலதன முதலீடாக 35,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார். 4000 மெகாவாட் திறன் கொண்ட பேட்டரி மின்சக்தி சேமிப்பு அமைப்புகளுக்கு சாத்தியக்கூறுகளின் அடிப்படையில் நிதி ஆதரவு வழங்கப்படும்.

பிஎம் ப்ரணாம்: மாற்று உரங்கள் மற்றும் ரசாயன உரங்களை சமநிலையில் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு நில மறுசீரமைப்பு, விழிப்புணர்வு, ஊட்டச்சத்து மற்றும் மேம்படுத்துதலுக்கான பிரதமரின் ப்ரணாம் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

கோபர்தான் திட்டம்: சுழற்சி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோபர்தான் திட்டத்தின் கீழ், கழிவிலிருந்து செல்வ வளத்தை உருவாக்கும் வகையில் 500 புதிய ஆலைகள், மொத்தம் 10,000 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்படும்.