உலகில் நான்காம் தொழிற்புரட்சியை வழிநடத்தும் தகுதி இந்தியாவுக்கு இருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தொழில்துறை 4.O கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடியின் செய்தி வாசிக்கப்பட்டது. துறையின் இணை செயலாளர் அதனை வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறி இருப்பதாவது:

இதற்கு முன் ஏற்பட்ட தொழிற்புரட்சிகளை இந்தியாவால் பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன. ஆனால், 4வது தொழிற்புரட்சியை வழிநடத்தும் ஆற்றல் இந்தியாவுக்கு இருக்கிறது. ஏனெனில், போதுமான மனித வளம், தேவை, தீர்க்கமான அரசு என அனைத்தும் இம்முறை ஒன்றாக இணைந்துள்ளன.

உற்பத்தியில் உலகின் மிக முக்கிய நாடாக இந்தியாவை நிலைநிறுத்துவதில் பொருளாதாரத்திற்கும் வணிகத்திற்கும் முக்கிய பங்கு இருக்கிறது. இதை உணர்ந்து தற்போதைய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, தொழில்நுட்பங்கள் மூலம் நடைபெறும் உற்பத்திக்கான உலக மையமாக இந்தியாவை மாற்றத் தேவையான சீர்திருத்தங்கள் மற்றும் ஊக்குவிப்புகளை மத்திய அரசு செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கனரக தொழிற்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே, நான்கம் தொழிற்புரட்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தெரிவித்தார். உலக உற்பத்திக்கான மையாக இந்தியா முன்னேறி வருவதாகக் கூறிய அவர், 3டி பிரிண்டிங், மெஷின் லேர்னிங், டேடா அனலிட்டிக்ஸ் ஆகியவை தொழில்துறை வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாகக் குறிப்பிட்டார்.