இந்தியா சீனா எல்லைப் பகுதிகளில் அத்துமீறி சீனா ராணுவ விமானங்கள் பறக்கக் கூடாது என சீனா ராணுவத்திடம் இந்திய தரப்பு அறிவுறுத்தியுள்ளது. பஃபர் சோன் எனப்படும் இரு நாடு எல்லைகள் சந்தித்துக்கொள்ள 10 கிமீ பகுதிக்குள் சீனாவின் விமானங்கள் நுழையக் கூடாது என இந்திய ராணுவ அதிகாரிகள் சீன ராணுவத்திடம் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியா – சீனா எல்லையில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பரபரப்பு நிலவி வருகிறது. இரு நாடுகளின் எல்லையான லடாக் LAC-Line of Actual Control பகுதியில் இரு நாட்டு வீரர்களும் 2020ஆம் ஆண்டு கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த மோதலைத் தொடர்ந்து இரு நாட்டு ராணுவமும் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டது. இந்த மோதல் போக்கை பேச்சு வார்த்தை மூலம் தீர்க்க இரு நாட்டு வெளியுறவுத்துறை, ராணுவ தலைமைகள் பல்வேறு கட்டமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி கிழக்கு லடாக் பகுதியில் சுஷுல் – மோல்டோ பகுதியில் இந்திய விமானப் படை கமான்டர், மூத்த ராணுவ அதிகாரிகள் சீனா ராணுவ தரப்புடன் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது கடந்த ஜூன் மாத காலத்தில் கிழக்கு லடாக் எல்லை பகுதியை ஒட்டி சீனா ராணுவ ஜெட் விமானங்கள் பறந்தது முறையல்ல. இது போன்ற சம்பவங்கள் சீன தரப்பில் இருந்து அவ்வப்போது நடைபெறுகிறது. எனவே, இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருப்பதை சீனா தரப்பு உறுதி செய்ய வேண்டும் அறிவுறுத்தியுள்ளது.

2020ஆம் ஆண்டு மோதலுக்குப் பின் இரு நாடுகளும் சுமார் 50,000 ஆயிரம் வீரர்களை எல்லை பகுதியில் குவித்து வைத்துள்ளன. நிலைமையை பேச்சுவார்த்தை மூலம் சுமுகமாக்க இரு தரப்பு ராணுவ பேச்சு வார்த்தை இதுவரை 16 முறை நடைபெற்றுள்ளது. தைவானிற்கு அமெரிக்கா சபாநாயகர் அன்மையில் பயணம் செய்ததை அடுத்து தைவான் நாட்டை சுற்று விமான போர் ஒத்திகையை சீனா கடந்த இரு நாள்களாக மேற்கொண்டு வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றன. இந்த சூழலில் தான் இந்தியாவும் சீனாவிடம் எல்லைப் பகுதி விமான செயல்பாடுகளில் அத்துமீறக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது.