நாட்டில் மாறிவரும் பொருளாதார சூழலை சமாளிக்க பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) அளவிலான 4 வங்கிகள் தேவை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்திய வங்கிகள் சங்கத்தின் 74-வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் நேற்று அவர் கூறியதாவது:

கரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மற்றும் அதைத் தொடர்ந்த கட்டுப்பாடுகள் உள்ளிட்ட சூழலில் வங்கிகள் டிஜிட்டல் பரிவர்த்தனையை பரவலாக்கி சமாளித்தன. பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உள்ள வங்கிகள் நிலைமையை மிகச் சிறப்பாகவே கையாண்டன. இருப்பினும் இப்போது உள்ள சூழல் மற்றும் எதிர்கால பொருளாதார வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது எஸ்பிஐ அளவுக்கு 4 வங்கிகள் இருப்பது அவசியம். பொருளாதார மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் வகையிலான பணப்புழக்கத்துக்கு இது அவசிய மாகும்.

வங்கிகள் டிஜிட்டல் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டியுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை புகுத்துவதன் மூலம் தனித்துவமாக இந்திய வங்கிகள் திகழ முடியும்.

நாட்டின் பல பகுதிகளில் பொருளாதார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. ஆனாலும் சில கிராமப் பகுதிகளில் வங்கிகளின் சேவை போதுமான அளவுக்கு இல்லை என்பதே யதார்த்தமான நிலையாக உள்ளது. இப்பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் தொடங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு எந்த ஒரு பகுதியிலும் வங்கிக் கிளைகள் இல்லை என்ற நிலை உருவாக வேண்டும். அத்துடன் டிஜிட்டல் பரிவர்த்தனை கிடைக்க வகை செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். – பிடிஐ