நடப்பு நிதி ஆண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 10 சதவீத அளவுக்கு அதிகரிக்கும் என்று பொருளாதார விவகாரம் சார்ந்த ஆய்வு மையமான என்சிஏஇஆர் இயக்குநர் ஜெனரல் பூணம் குப்தா தெரிவித்துள்ளார்.

கரோனா காரணமாக சர்வதேச அளவில் பொருள் விநியோக சங்கிலி பாதிக்கப்பட்ட போதிலும் இத்தகைய வளர்ச்சியை இந்தியா எட்டும் என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும் அடுத்து வரும் காலங்களில் 7 சதவீதம் முதல் 8 சதவீத அளவுக்கு வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்வது பெரும் சவாலாக இருக்கும் என்றார்.

நடப்பு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதமானது பல்வேறு அளவினைக் கொண்டதாக இருந்தாலும் ஒட்டுமொத்தமான வளர்ச்சி10 சதவீத அளவுக்கு இருக்கும். இதற்கு பொருள் விநியோக சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு, உற்பத்தி மற்றும் தேவைக்கான இடைவெளி அதிகரிப்பு, வழக்கமான மற்றும் தொடர்பு ரீதியான சேவை துறை தொய்வு ஆகியவை காரணிகளாக இருக்கும்.

கரோனா வைரஸ் தொற்று பரவல் காலத்தின் இரண்டு ஆண்டுகளை கணக்கில் எடுத்துக் கொண்டால் மிகச் சிறிய அளவில் நிகர வளர்ச்சி தெரிகிறது. அந்த வகையில் பார்க்கும்போது 2019-20-ல் எட்டப்பட்ட வளர்ச்சியைக் காட்டிலும் 2021-22-ல் சற்று அதிகமாக இருக்கும்.

கரோனாவின் பாதிப்பிலிருந்துமீண்டு வளர்ச்சியை எட்டுவது அதை தொடர்ந்து வரும் ஆண்டுகளில் தக்க வைத்துக் கொள்வது ஆகியவைதான் பெரும் சவாலாகஇருக்கும் என்று அவர் கூறினார்.

நடப்பு நிதி ஆண்டில் ஏப்ரல்முதல் ஜூன் வரையான காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 20.1 சதவீதமாக உள்ளது. கரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை தீவிரமடைந்த சூழலில் இத்தகைய வளர்ச்சி பாராட்டக்குரியது என்றார்.

முந்தைய ஆண்டு இதே காலத்தில் நாட்டின் ஜிடிபி மைனஸ் 24.4% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மையத்தின் முதலாவது பெண் இயக்குநர் ஜெனரல் பூணம்குப்தா. இப்பொறுப்பை ஏற்பதற்கு முன்பு அவர் உலக வங்கியின் பொருளாதார நிபுணராக பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here