இந்தியாவில் பிறந்து வளர்ந்த கிரிக்கெட் வீரரான புஷ்கர் சர்மா, ஆப்பிரிக்க கிரிக்கெட் வட்டாரத்தில் மிகவும் பிரபலம். ஆல் ரவுண்டரான அவருக்கு கென்யாவின் தேசிய கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த நவம்பர் வாக்கில் நடைபெற்ற ஐசிசி டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்று ஏ-வில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார்.

இடது கை பேட்ஸ்மேன் மற்றும் பவுலரான அவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நைரோபி பிராந்திய கிரிக்கெட் சங்க சூப்பர் டிவிஷன் லீக் தொடரில் 14 இன்னிங்ஸில் 841 ரன்களை குவித்து அசத்தினார். அதேபோல ஆப்பிரிக்க கிரிக்கெட் ப்ரீமியர் லீக் தொடரில் (கென்யா) 228 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார். அதன் மூலம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்களின் கவனத்தை அவர் பெற்றுள்ளார்.

தான் கிரிக்கெட் விளையாட தனக்கு ஸ்பான்ஸர் செய்து உதவிய இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு அவர் நன்றி சொல்லியுள்ளார். அடுத்து அந்த அணி விளையாட உள்ள தகுதி சுற்று போட்டி 2024 டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற மிகவும் முக்கியமாகும்.

மும்பை மண்ணை சேர்ந்த இவர், கிரிக்கெட் விளையாட பழகிக் கொண்டதும் அங்குதான். அண்டர் 16 பிரிவில் மும்பை அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.