இந்தியன் ஆயில் பங்க்களில் எரிபொருளை நிரப்பிக் கொண்டு கூகுள் பே செயலி மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு கேஷ் பேக், ரிவார்டு புள்ளிகளை சமர்ப்பிக்கும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியன் ஆயில் நிறுவனமும், கூகுள் பே நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கும் வகையில் கூட்டுசேர்ந்துள்ளன. இதன்படி இந்தியன்ஆயில் பங்க்களில் எரிபொருள் நிரப்பிவிட்டு கூகுள் பே செயலிமூலம் பணம் செலுத்தினால் விதிமுறைகள், நிபந்தனைகளுக்கு உட்பட்டு ரூ.500 வரை கேஷ்பேக் கிடைக்கும். இச்சலுகை நாடு முழுவதும் உள்ள 30 ஆயிரம் இந்தியன்ஆயில் பங்க்களில் கிடைக்கும்.

மேலும் ‘எக்ஸ்ட்ரா ரிவார்ட்ஸ்’ என்ற பெயரில் கிடைக்கும் லாயல்டி புள்ளிகளை கூகுள் பேசெயலி மூலம் வாடிக்கையாளர்கள் சமர்ப்பித்து அதன் மூலம் பணத்தை மிச்சப்படுத்த முடியும்.இதற்கு கூகுள் பே பயனாளர்கள் இந்தியன் ஆயிலின் எக்ஸ்ட்ராரிவார்ட்ஸ் லாயல்டி திட்ட உறுப்பினர் சேர்க்கைக்குப் பதிவு செய்யலாம் அல்லது ஏற்கெனவே உள்ளஉறுப்பினர் தொகையை தங்கள்கூகுள் பே கணக்குடன் இணைக்கலாம். இத்திட்டம் குறித்து இந்தியன் ஆயில் நிறுவன தலைவர் எஸ்.எம்.வைத்யா கூறும்போது, “எங்களின் கூட்டு முயற்சி வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பது மட்டுமின்றி, அதிநவீன டிஜிட்டல் அனுபவத்தை தரும். இது டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முன்னேற்றத்துக்கு எமது பங்களிப்பாக கருதுகிறேன்” என்றார்.

“வாடிக்கையாளர்களுக்கு நவீன வசதியையும், சேமிப்பையும் வழங்கும் வகையிலான இத்திட்டத்துக்காக இந்தியன் ஆயில்நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று கூகுள் ஏபிஏசி வணிகத் தலைவர் சுஜித் சிவானந்தன் தெரிவித்தார்.