அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 80-க்கும் கீழே சரிவு கண்டது.

உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.

அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.

இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை கடந்த ஜூன் மாதம் 2,563 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அதிகபட்ச உயர்வாகும். வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் இடையேயான வித்தியாசம் ஆகும். இந்தியாவின் ஜுன் மாத ஏற்றுமதி 16.8 சதவீதம் அதிகரித்து 3,790 கோடி அமெரிக்க டாலர்களாக உள்ளது.

இதனால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 79.40 ஆக வீழ்ச்சி கண்டது.

உலகளாவிய மந்தநிலை மற்றும் கச்சா எண்ணெய் சந்தை நிலவரம் பற்றிய முதலீட்டாளர்களின் கவலைகள் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிவடைந்ததாக தெரிகிறது. வெள்ளியன்று 79.25 ஆக இருந்ததை ஒப்பிடுகையில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 79.38/39 ஆக இருந்தது.

இந்தநிலையில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று 80 ரூபாய்க்கு கீழே சரிவு கண்டது. அமெரிக்க பெடரல் வங்கிக் கூட்டம் நடைபெறும் நிலையில் வட்டி விகிதம் மேலும் உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக ரூபாய் மதிப்பு சரிவு கண்டுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு ஏழாவது முறையாக தொடர் சரிவை எட்டியது. திங்களன்று 79.97 ஆக இருந்து பலவீனமடைந்து 80.05 என்ற வரலாற்று வீழ்ச்சியை சந்தித்தது. இந்திய நாணயம் இந்த ஆண்டு 7 சதவீதத்திற்கும் மேலாக சரிந்துள்ளது, கடந்த ஏழு அமர்வுகளில் ஆறில் இது மிகக் குறைந்த அளவிலேயே முடிந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றம், வர்த்தகம் மற்றும் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை, உலகளாவிய பொருளாதார மந்தநிலை போன்ற காரணங்களால் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு இந்தியாவில் செய்துள்ள முதலீடுகளில் 29 பில்லியன் டாலர்களை விற்பனை செய்து தங்கள் நாட்டிற்கு பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.