அந்நியர்களுக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்து தியாகம் புரிந்தவர்களின் வரலாறு கற்பிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு ஏற்ப நாட்டின் வரலாறு மாற்றி எழுதப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாமில் அஹோம் அரசாட்சி இருந்த 17-ம் நூற்றாண்டில் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படைகளை தோற்கடித்த போர்படைத் தளபதி லச்சித் பர்புகானின் 400-ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: “நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய வரலாறு இந்திய பார்வையில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்நியர்கள் ஆட்சிக் காலத்து சதியின் ஒரு பகுதியாக எழுதப்பட்ட வரலாறுதான் தொடர்ந்து கற்பிக்கப்படுகிறது.

அந்நியர்களுக்கு அடிமைப்பட்ட ஒரு நாடு என்பது அல்ல, இந்தியாவின் வரலாறு. அவர்களை எதிர்த்து நிகழ்த்தப்பட்ட போர்களையும், போர்களை முன்னின்று நிகழ்த்திய மாவீரர்களையும், அவர்களின் தியாகங்களையும் சொல்வதே இந்திய வரலாறு. ஏனெனில், அந்நிய ஆட்சியாளர்கள் இந்த மண்ணில் தொடர்ந்து எதிர்க்கப்பட்டு வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக ஏராளமான மாவீரர்கள் நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் தொடர்ந்து தோன்றிய வண்ணம் இருந்திருக்கிறார்கள்; தீரத்துடன் போரிட்டிருக்கிறார்கள்; பலர் தங்கள் உயிரையே தியாகம் செய்திருக்கிறார்கள்.

தன்னலம் கருதாது மாவீரத்துடன் போரிட்ட அவர்களின் தியாகங்களைப் போற்றக் கூடியதாக நமது வரலாறு இருந்திருக்க வேண்டும். ஆனால், இவை வெளிப்படையாக மறைக்கப்பட்டுவிட்டன. துரதிர்ஷ்டவசமாக நாடு சுதந்திரம் அடைந்த பிறகு நமது வரலாறு அப்படி எழுதப்படவில்லை.

லச்சித் பர்புகானின் வீரம் வரலாறு இல்லையா? முகலாயர்களுக்கு எதிராக போரிட்டு உயிர்த்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான வீரர்களின் தியாகம் வரலாறு இல்லையா? நாடு விடுதலை அடைந்ததும், நம்மை அடிமைப்படுத்தியவர்களின் சதி குறித்தும், அவற்றுக்கு எதிராக நாம் எவ்வாறு தீரத்துடன் எதிர்வினை ஆற்றினோம் என்பது குறித்தும் சொல்லப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அது நிகழவில்லை.

மாவீரர்களின் வரலாறு, போர் வெற்றிகளின் வரலாறு, தியாகங்களின் வரலாறு ஆகியவைதான் இந்தியாவின் வரலாறு. இதற்கு ஏற்ப நாம் நமது வரலாற்றை மாற்றி எழுத வேண்டும். புராதனச் சின்னங்களை மட்டும் நாம் கொண்டாடவில்லை. மாவீரத்தை வெளிப்படுத்தியவர்களையும் நாம் கொண்டாடுகிறோம். இந்தியா பல்வேறு சிந்தனைகளை; நம்பிக்கைகளை; கலாச்சாரங்களை ஒன்றிணைக்கும் நாடு. இந்தியா எப்போதுமே அதன் உன்னதமான கலாச்சாரத்தையும், ஆன்மிகத்தையும் போற்றி பாதுகாத்து வந்திருக்கிறது.

அந்நிய சக்திகளிடம் இருந்து நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை எழும்போது, நமது இளைஞர்கள் தங்கள் மாவீரத்தை வெளிப்படுத்தியே வருகிறார்கள்” என்றார் பிரதமர் மோடி.