நீட் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படுகிறது.

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்றது. இதற்கான கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பாக முதுநிலை மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு 10 சதவீதஇடஒதுக்கீடு, இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினருக்கு வருமான உச்ச வரம்பாக ரூ.8 லட்சம் எந்த அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதன்படி வருமான உச்ச வரம்பை ஆராய நிபுணர் குழுவைமத்திய அரசு நியமித்தது. இந்தகுழு கடந்த டிசம்பர் 31-ம் தேதிதனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பொருளாதாரத்தில் நலிந்த பொது பிரிவினர் இடஒதுக்கீடு சலுகை பெற ரூ.8 லட்சம் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது நியாயமானது” என்று தெரிவிக்கப்பட்டது.

வழக்கின் அடுத்த விசாரணை ஜனவரி 6-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இந்த சூழலில் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவிடம் மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா நேற்று முறையிட்டார்.

அப்போது தலைமை நீதிபதி கூறும்போது, “இடஒதுக்கீடு வழக்கை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க வேண்டும். இந்த வாரம் 2 நீதிபதிகள் அமர்வே வழக்குகளை விசாரித்து வருகிறது. ஜனவரி 5-ம் தேதி புதன்கிழமை 3 நீதிபதிகள் அமர்வை நியமிக்க முடியுமா என்று முடிந்தவரை முயற்சி செய்யப்படும். இல்லையெனில் அதேநாளில் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.

தலைமை நீதிபதியின் உத்தரவின்படி முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடஒதுக்கீடு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்றுவிசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட உள்ளது. வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியவுடன் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது.