70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் தர வேண்டும் என ஓய்வூதியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும்ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க 2-வது மாநிலப் பிரதிநிதித்துவப் பேரவைக் கூட்டம் நேற்று தருமபுரியில் நடந்தது. இக்கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். கவுரவத் தலைவர் பரமேஸ்வரன் முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கக் கொடியை மாநிலத் தலைவர் ராமமூர்த்தியும், தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கக் கொடியை கவுரவத் தலைவர் பரமேஸ்வரனும் ஏற்றி வைத்தனர். தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநிலப் பேரவை வரவேற்புக் குழுத் தலைவர் ஆறுமுகம் நிகழ்ச்சியில் வரவேற்புரை ஆற்றினார். மாநில துணைத் தலைவர் சுப்ரமணியம் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் பழனியம்மாள் பேரவையைத் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

மாநிலப் பொதுச் செயலாளர் ரவி வேலை அறிக்கையையும், மாநிலப் பொருளாளர் மகாலிங்கம் நிதிநிலை அறிக்கையையும் பேரவையின் பரிசீலனைக்கு முன்வைத்து ஒப்புதல் பெற்றனர். டிஎன்ஆர்டிஎஸ்ஓஏ மாநிலத் தலைவர் கென்னடி பூபாலராயன், டிஎன்ஆர்டிஓஏ மாநில பொதுச் செயலாளர் பாரி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறை படுத்த வேண்டும். நிலுவை ஒழுங்கு நடவடிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 வயது மூத்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதியத்தை 50 சதவீதமாக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில், மாநில துணைத் தலைவர்கள் சுந்தரமூர்த்தி நாயனார், நடராஜன், மாநிலச் செயலாளர்கள் மூர்த்தி, ஜான் செல்வராஜ், ராஜகோபாலன், கோமதிநாயகம், நாகராஜன், யுவராஜ், சுப்பிரமணியன், மாநில தணிக்கையாளர்கள் அப்பாவு, வேதகிரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டிஎன்ஜிபிஏ மாநிலப் பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையும், பாபு நன்றியுரையும் ஆற்றினர்.