ஆஸ்கர் 2023 விருது பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் (shortlist) இடம்பெற்றுள்ள 5 இந்தியத் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’. இதனை அந்தப் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பகிர்ந்துள்ளார்.

கடந்த 2022 மார்ச் மாதம் இந்தியா முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருந்தது தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம். 1990-களில் காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த திரைப்படத்திற்கு வரி விலக்கும் கொடுக்கப்பட்டு இருந்தது. வசூல் ரீதியாகவும் கல்லா கட்டியிருந்தது இந்தத் திரைப்படம். மொத்தமாக 340 கோடி ரூபாயை இந்தப் படம் வசூல் செய்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், ஆஸ்கர் விருது பரிந்துரைக்கான தெரிவுப் பட்டியலில் இந்தப் படம் இடம்பிடித்துள்ளது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பகிர்ந்துள்ளார்.

“சிறந்த திரைப்படத்துக்கான விருதுப் போட்டியில் இடம்பெற்றுள்ள 5 இந்தியப் படங்களில் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படமும் ஒன்று. அனைவரையும் இந்நேரத்தில் நான் வாழ்த்துகிறேன். இந்திய சினிமாவின் சிறப்பான ஆண்டு இது. பல்லவி ஜோஷி, மிதுன் சக்ரவர்த்தி, தர்ஷன் குமார், அனுபம் கெர் ஆகியோரும் சிறந்த நடிகர்களுக்கான பரிந்துரைக்குரிய தெரிவுப் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். இது வெறும் ஆரம்பம்தான். இன்னும் நீண்ட தூரம் செல்ல உள்ளோம். அனைவரையும் ஆசிர்வதிக்கவும்” என அவர் தெரிவித்துள்ளார்.