மதுரையில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து மீனாட்சி அம்மன் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள், அர்ச்சர்களின் விவரங்கள் சேகரிப்பட்டு வருகின்றன.

உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலுக்கு முதன்முறையாக இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாளை மறுநாள் (பிப்.18) மதியம் 12 மணிக்கு வருகிறார். அம்மன், சுவாமி சன்னதிகளில் தரிசனம் செய்யும், அவர் கோயிலில் பல்வேறு இடங்களையும் அவர் பார்வையிடுகிறார். சுமார் ஒன்றரை மணி நேரம் வரையிலும் அவர் கோயிலுக்குள் இருக்கிறார் என்றும், இதன் பிறகு அவர் மதுரை விமான நிலையம் சென்று, கோவைக்கு புறப்பட்டுச் செல்வதாகவும் அவருக்கான பயணத்திட்ட விவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குடியரசு தலைவர் மதுரை வருகையையொட்டி விமான, நிலையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதி, அவர் காரில் செல்லும் வழித்தடங்கள் என, சுமார் 3 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர். மீனாட்சி அம்மன் கோயிலை சுற்றிலும் 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. ஏற்கெனவே சித்திரை வீதிகள், கோயில் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராக்கள் தவிர, மேலும், அம்மன் சன்னதி பகுதி உள்ளிட்ட இடங்களில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

கோயிலுக்கு வெளியில் தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தி கேமராக்களால் கண்காணிக்கப்படுகிறது. சித்திரை வீதியில் குடியரசு தலைவருக்கென தற்காலிக சிறப்பு அறை ஒன்று தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கோயிலில் ஏற்கெனவே பாதுகாப்பு பணியிலுள்ள போலீஸார் மற்றும் கோயில் பணியாளர்கள், அலுவலர்கள், அர்ச்சர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் இருப்பிடம், குடும்ப விவரங்களும் காவல் துறையினரால் சேகரிக்கப்படுகின்றன.

விமான நிலையம் முதல் மீனாட்சி அம்மன் கோயிலுக்கு குடியரசு தலைவர் செல்லும் வழித்தடம் பகுதிகள் எல்லாம் மாநகர காவல் எல்லையில் வருவதால் காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒருவேளை சுற்றுச்சாலையை பயன்படுத்தும் பட்சத்தில் புறநகர் போலீஸார் தயார் நிலையில் இருக்க, டிஐஜி பொன்னி, காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத்துக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, குடியரசுத் தலைவருக்கான சிறப்பு பாதுகாப்புக் குழு ஒன்று டெல்லியில் இருந்து மதுரை வந்தது. அக்குழுவினர் மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலைய பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து ஆய்வு செய்தனர். பிறகு இரு இடங்களிலும் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இதற்கிடையில் குடியரசுத் தலைவருக்கான பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த மேலும் ஒரு குழு டெல்லியில் இருந்து இன்று மதுரை வந்தது. மீனாட்சி கோயில் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து, பாதுகாப்பு ஏற்பாடு குறித்த விவரங்களை அக்குழுவினர் சேகரித்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.