இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக, தமிழக அரசு மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகம் வழியாக 30 ஆயிரம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அங்குள்ள மக்களுக்கு உதவும் வகையில் தமிழகத்தில் இருந்து ரூ.80 கோடிமதிப்பில் 40,000 டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான மருந்து பொருட்கள் மற்றும் ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகிய அத்யாவசியப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து அனுப்பப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

அதன் தொடர்ச்சியாக, சென்னையில் இருந்து கப்பல் மூலம் 10,000 டன் அரிசி கடந்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள 70 அரிசி ஆலைகளில் இருந்து, இலங்கைக்கு அனுப்புவதற்காக 30,000 டன் அரிசி தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அரிசியை தமிழக அரசின் முத்திரையுடன் கூடிய 10 கிலோ பைகளில் நிரப்பி, 5 பைகளை ஒரு பண்டலாக பொட்டலமிடும் பணி, தூத்துக்குடி துறைமுகத்தின் அருகில் உள்ள 3 கிட்டங்கிகளில் நடந்து வருகிறது.

தூத்துக்குடி கோவில்பிள்ளைநகர் மன்னர் அய்யா கிட்டங்கியில் நடைபெறும் அரிசி பொட்டலமிடும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் நேற்று ஆய்வு செய்தார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரிசி பைகள்பொட்டலமிடும் பணி முடிவடைந்ததும் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து கப்பல் மூலம்இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படும். இதுபோல், பால் பவுடர் மற்றும் மருந்துகளும் சேகரித்து அனுப்பப்படும்’’ என்றார்.

ஆய்வின்போது, தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தூத்துக்குடி மண்டல மேலாளர் முத்துலட்சுமி, தரக்கட்டுப்பாட்டு அலுவலர் மணிகண்டன், தூத்துக்குடி வட்டாட்சியர் செல்வக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.