பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்படுள்ள இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கக் கூடாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற நீதிபதி மகேஷ்வரி தினேஷ் தலைமையிலான அமர்வு முன்பு கடந்த வாரம் அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஒரு முறையீடு செய்யப்பட்டது. அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் எங்களது தரப்பில் தனியாக வேட்பாளரை நிறுத்த விரும்புகிறோம். ஆனால், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் என்ற முறையில் எனது கையொப்பத்துடன் அனுப்பக்கூடிய வேட்பாளரின் பெயரை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்க மறுக்கிறது.

எனவே இந்த விண்ணப்பத்தை அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது. ஜனவரி 30-ம் தேதியன்று, தனது கையொப்பமிட்ட வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஏற்க உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த மனு தொடர்பான விவரங்களை ஓபிஎஸ் மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் பகிர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு உத்தரவிட்டது. மேலும் மனு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் இடையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க கூடாது. மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து விவகாரங்களும் அடங்கியுள்ள நிலையில், இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது அல்ல.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் காலாவதியாகிவிட்டது என்பதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வழக்கு மூலமே மேற்கண்ட பதவிகள் ரத்தாகிவிட்டதா, இல்லையா என்பது முடிவாகும். அதுவரை எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் அதிகாரம் கேட்டு உரிமை கோரமுடியாது. எனவே, அவர் தரப்பில், தற்போது தாக்கல் செய்துள்ள மனுவை ஏற்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அது பொதுக்குழு வழக்கின் தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். அதிமுகவை முறைகேடாக கைப்பற்ற நினைத்த எடப்பாடி பழனிசாமிக்கு, கடந்த செப். 30-ல் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தடை விதித்தது கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேல்முறையீடு உட்பட எந்தவொரு முந்தைய வழக்கிலும் ஒரு கட்சியாக இல்லாத நிலையில் தற்போது எப்படி தேர்தல் ஆணையத்திடம் ஒரு கட்சியாக சேர்க்க வேண்டும் என கோர முடியும்? இவ்விவகாரம் உரிய சட்ட வழிமுறைபடிதான் நடக்க வேண்டும் என்பதால் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கைகளை ஏற்காமல் வைத்துள்ளது” என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.