அரசுப் பள்ளிகளில் கணினி தொழில்நுட்பம், கணினி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு மாற்றாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ என்ற புதிய பாடத்தை பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையர் க.நந்தகுமார், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்;

தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில், அரசுப் பள்ளிகளில் கற்றுத் தரப்படும் தொழிற்கல்வி பாடங்கள் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் உதவியுடன் மேம்படுத்தப்படும். இதனால் மாணவர்கள் தொழிற்சாலைகளின் தேவைகளுக்கேற்ப திறன்பெற்று உடனடி வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.

அதற்கேற்ப தொழிற்கல்வி பாடத்திட்டம், பாட நூல்களை சீரமைக்க உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

அதன்படி அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின்படி அடிப்படைஇயந்திரவியல், மின் பொறியியல்,மின்னணு பொறியியல், நெசவியலும் ஆடை வடிவமைப்பும், செவிலியம், வேளாண் அறிவியல், அலுவலக மேலாண்மை ஆகிய 8 பாடநூல்கள் மட்டும் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த பாடத்திட்டம் மாணவர்களின் வேலைவாய்ப்பு திறன்களை வளப்படுத்தி, மாணவர்கள் படித்து முடித்தவுடன் திறன்சார்ந்த பணிகளுக்கு செல்வதற்கு ஏதுவாக தொழிற்சாலை சார்ந்த திறன்களைபெற்றுள்ளனர் என்ற தகுதிச்சான்றிதழை பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதேபோல், கணினி தொழில்நுட்பம் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கு மாறாக ‘வேலைவாய்ப்பு திறன்கள்’ என்றபுதிய பாடம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான புத்தகத்தை tnschools.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இப் பாடம் நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பாடம் புதியது என்பதால்மாணவர்களின் நலன்கருதி நடைபெற உள்ள முதல் பருவத்தேர்வில் முதல் பாடத்தில் இருந்து மட்டும் கேள்விகள் தயாரித்து பள்ளிகள் அளவில் மதிப்பீடு செய்துகொள்ள வேண்டும். இதுசார்ந்து அனைத்து பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் போதுமான அறிவுறுத்தல்களை வழங்கவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்புக்கு தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் உட்பட பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.