அவசர நிமித்தமாக பதிவு செய்ய விரும்பும் பொதுமக்களின் வசதிக்காக ஆவணப்பதிவிற்கான முன்பதிவு டோக்கன் வழங்குவதில் “தட்கல்” முறை அறிமுகப்படுத்தப்படும் என்பது உள்ளிட்ட அம்சங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது, பொதுமக்களுக்கு பத்திரப்பதிவு தொடர்பான சேவைகளை அளிக்க “ஒருங்கிணைந்த சேவை மையம் அமைத்தல், வணிகவரித் துறையின் நுண்ணறிவுப் பிரிவில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவை பயன்படுத்துதல், பதிவுத்துறையில் ஒருங்கிணைந்த தகவல் மையம் அமைத்தல், அலுவலகங்களில் பணியாற்றும் பொதுமக்களின் வசதிக்காக விடுமுறை நாளன்று பதிவுப் பணியை மேற்கொள்ளும் வகையில் சார்பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி அறிவித்தார். அவர் வெளியிட்ட 32 முக்கிய அறிவிப்புகள்:

> பொதுமக்கள் தாங்கள் பெறும் சரக்கு அல்லது சேவைக்கான விலைப்பட்டியலை கேட்டுப் பெறுவதை ஊக்குவிக்கும் விதமாக வணிகவரித்துறையில் ‘எனது விலைப்பட்டியல் – எனது உரிமை’ என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.