கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மயங்கிக் கிடந்த இளைஞரை தோளில் சுமந்து ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

சென்னையில் கனமழை கொட்டிவரும் நிலையில், மாநகராட்சி உள்ளிட்ட பிற துறையினருடன் இணைந்து காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி போலீஸாருடன் அங்கு சென்றுள்ளார்.

அங்கு கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்துள்ளார். இதையடுத்து ஆய்வாளர், இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை செய்துள்ளார். அப்போது அந்த இளைஞரின் உடலில் அசைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனது தோளில் தூக்கிச் சென்று அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து அதில், அந்த இளைஞரை ஏற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

தற்போது அந்த இளைஞர் நலமுடன் உள்ளார். மயங்கிக் கிடந்தவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கிப் பணி செய்து வருவதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.

இளைஞரை மீட்டது தொடர்பாக காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறும்போது, “நேற்று காலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறை மூலம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, உதவி ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் அய்யனார், சுரேஷ், அசோக் ஆகியோருடன் சம்பவ இடத்துக்கு சென்றேன். அங்கிருந்த இளைஞர் உயிருடன் இருப்பது தெரியவந்ததும் சற்றும் தாமதிக்காமல் அவருக்கு முதலுதவி அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அவரைக் காப்பாற்றியது மனநிறைவைத் தருகிறது” என்றார்.

பெண் காவல் ஆய்வாளரின் இந்த செயலை பொதுமக்களும், காவல் அதிகாரிகளும் வெகுவாக பாராட்டினர்.