ஐபிஎல் டி20 தொடரில் அனைவராலும் உற்றுநோக்கப்படும் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இரு முக்கிய வீரர்கள் முதல் சில போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

துபாயில் கடந்த 2 வாரங்களாக சிஎஸ்கே அணியினர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வரும்நிலையில் இந்த இரு வீரர்கள் பங்கேற்காதது சற்று பின்னடைவை சிஎஸ்கே அணிக்கு ஏற்படுத்தியுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் டூப்பிளசிஸ் தற்போது கரீபியன் லீக்கில் செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். டூப்பிளசிஸுக்கு சமீபத்தில் தலையில் பந்துபட்டு ஏற்பட்ட காயத்தால் கன்கஸனில் வெளியேறினார். இதனால் கடந்த இரு போட்டிகளாக அவர் பங்கேற்கவில்லை. கரிபீயன் லக்கில் அருமையான ஃபார்மில் இருந்து வரும் டூப்பிளசிஸ் 3-வது அதிகபட்ச ஸ்கோரை எடுத்த வீரராக இருந்து வருகிறார்.

டூப்பிளசிஸுக்கு உடல்நிலை விரைவாக குணமடைந்துவிடும் பட்சத்தில் சிஎஸ்கே அணியில் இணைந்து உடனடியாக போட்டியில் பங்கேற்பாரா எனத் தெரியவில்லை. ஆதலால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் அடுத்த சில ஆட்டங்களில் டூப்பிளசிஸ் பங்கேற்பதில் சிக்கல் நீடிக்கிறது.

டூப்பிளசிஸ் உடல்நிலை குறித்து சிஎஸ்கே அணி வட்டாரங்கள் கூறுகையில் “ டூப்பிளசிஸ் உடல்நிலை குறித்து ஏதும் தெரியாது. அவர் துபாய் வந்தபின் உடல்நிலையை அணி மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அவர் உடற்தகுதியை ஆய்வு செய்தபின் அணியில் விளையாடுவது குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையே சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டரும், இங்கிலாந்து வீரருமான சாம் கரனும் முதல் சில போட்டிகளில் பங்கேற்கமாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சாம் கரன் இன்னும் துபாய்க்கு வந்து சேரவில்லை. அவர் இனிவரும் நாட்களில் வந்து சேர்ந்தாலும், அவர் 6 நாட்கள் தனிமைக் காலத்தை முடித்துதான் அணியில் சேர முடியும். அவ்வாறு சேரும்பட்சத்தில் முதல் சில போட்டிகளில் சாம் கரன் சிஎஸ்கே அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

இதற்கிைடயே கரிபீயன் லீக்கில் விளையாடிவரும் சிஎஸ்கே வீரர்கள் டுவைன் பிராவோ, இம்ரான் தாஹிர்,டூப்பிளசிஸ் ஆகிய மூவரும் நாளை துபாய் வந்து சேர்வார்கள் என சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் மூவரும் பயோபபுள் டிரான்ஸ்பர் முறையில் வருவதால் 6 நாட்கள் கட்டாயத் தனிமைத் தேவையில்லை. இங்கிலாந்தில் இருந்து வரும் வீரர்களுக்கு மட்டுமே 6 நாட்கள் கட்டாயத் தனிமை என பிசிசிஐஅறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.