டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பந்தை தடுத்து தனது ஃபீல்டிங் திறனை வெளிப்படுத்திய சிஎஸ்கே வீரர் பிராவோவை ‘வெல்டன் பெருசு’ என அந்த அணியின் கேப்டன் தோனி சொல்லியுள்ளார். அது ஸ்டம்பில் இருக்கும் மைக்கில் பதிவாகியுள்ளது.
நடப்பு ஐபிஎல் சீசனில் 11 போட்டிகளில் விளையாடி 4 வெற்றிகளை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ். இப்போது அந்த அணி தோனி தலைமையில் விளையாடி வருகிறது. டெல்லி அணிக்கு எதிரான 55-வது லீக் ஆட்டத்தில் 91 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது சென்னை. இதற்கு அடிப்படை காரணம் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள். ருதுராஜ், கான்வே என இருவரும் 110 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
இந்நிலையில், இந்த போட்டியில் சென்னை அணி பவுலிங் செய்த போது களத்தில் எதிரணி பேட்ஸ்மேன் ஒரு சிங்கிள் எடுப்பதை பாயிண்ட் திசையில் நின்று பீல்ட் செய்த போது தடுத்திருப்பார் பிராவோ. அதனை கவனித்த தோனி, ‘வெல்டன் ஓல்டு மேன்’ என உடனடியாக பிராவோவிடம் சொல்லி இருப்பார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி உள்ளது.
இதில் ஹைலைட் என்னவென்றால் பிராவோவை விட தோனி இரண்டு வயது மூத்தவர் ஆவார். ஆல்-ரவுண்டரான பிராவோவுக்கு 38 வயதாகிறது. தோனிக்கு 40 வயதாகிறது. ஆனால் அவரை ட்ரோல் செய்யும் வகையில் தோனி இதனை சொல்லியுள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸின் கடைசி ஓவரின் 2 பந்துகளை தோனி எதிர்கொண்டார். அப்போது இரண்டு ரன்கள் ஓட வேண்டாம், பவுண்டரி விளாசுங்கள் என நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த தான் தோனியிடம் சொன்னதாக தெரிவித்தார் பிராவோ. ஆனால் அந்த இரண்டு பந்திலும் தலா 2 ரன்கள் ஓட்டம் எடுத்திருந்தார் தோனி. அதனால் பிராவோ அவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டியதாயிற்று.