“தெலுங்குத் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா திகழ்ந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய இயலாத இழப்பாகும்” என்று தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் கிருஷ்ணாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “மூத்த தெலுங்கு நடிகர் “சூப்பர்ஸ்டார்” கிருஷ்ணா மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன். தெலுங்குத் திரையுலகில் பல புதுமைகளை அறிமுகப்படுத்திய முன்னோடியாக கிருஷ்ணா திகழ்ந்தார். அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்யவியலாத இழப்பாகும்.

கிருஷ்ணாவின் மகன் நடிகர் மகேஷ்பாபு மற்றும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 79. நடிகர் மகேஷ் பாபுவின் தந்தை இவர். மாரடைப்பு காரணமாக திங்கள்கிழமையன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து தசாப்தங்களாக திரை துறையில் இயங்கி வந்தவர். சுமார் 350-க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் அவர் நடித்துள்ளார். தொடக்க காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த அவர் 1965-க்கு பிறகு பிரதான ரோல்களில் நடிக்க தொடங்கினார். பல்வேறு ஜானர்களில் நடித்துள்ளார். எம்.பி ஆகவும் பணியாற்றி உள்ளார். 69 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தவர் கிருஷ்ணா என்பது குறிப்பிடத்தக்கது.