இந்தியாவின் சுயசார்பு பொருளாதார இலக்கை எட்டுவதற்குத் தேவையான நிதி சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னோடியாகத் திகழ்வதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் பிறந்த நாளான நேற்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பிரமதர் மோடி ட்விட்டரில் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார். அதில், இந்தியாவின் சுயசார்பு பொருளாதார இலக்கான ஆத்ம நிர்பாரத் செயல்பாட்டுக்குத் தேவை
யான அனைத்து நிதி சீர்திருத்தங்களையும் மேற்கொள்வதில் முன்னோடியாக விளங்குவது மிகவும் பாராட்டத்தக்க விஷயம் என்றும், நீண்ட ஆயுளோடு ஆரோக்கியமாகவாழ கடவுளை பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமரின் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்துள்ள நிதி அமைச்சர், பிரதமரின் ஆசிர்வாதமும் வழிகாட்டுதலுமே தன்னை வழிநடத்திச் செல்வதாகவும், நாட்டுக்காக தொடர்ந்து செயல்பட உந்து சக்தியாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பல தேசிய தலைவர்கள் மற்றும் பாஜக-வின் மூத்த தலைவர்கள் பலரும் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரி
வித்துள்ளனர். நீண்ட ஆயுளோடு இந்திய தேசத்திற்கு சேவை புரியஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

2019-ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான அரசு மீண்டும் பொறுப்பேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். முந்தைய பாஜக ஆட்சியின்போது நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராக பதவி வகித்தார். இப்போது முழு நேர மத்திய நிதி அமைச்சர் பொறுப்பை வகிக்கும் முதல் பெண்மணி என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. இதற்கு முன்பு பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்தி நிதியமைச்சராக இருந்தார். 2020-21-ம் நிதி ஆண்டில் தனது முதலாவது பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதுதவிர கரோனா தடுப்புக்கான பொருளாதார பொறுப்புக் குழு வின் தலைவராகவும் இவர் இருந்துள்ளார். – பிடிஐ