ரஜினியின் 169-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் 169-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதற்கான ஸ்பெஷல் வீடியோ ஒன்றை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. ‘பீஸ்ட்’ படத்தின் பணிகள் நிறைவடைந்ததும் ‘ரஜினி 169’ படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக படக்குழு ஐஸ்வர்யா ராயிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், உறுதியானதும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

2010ஆம் ஆண்டு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான ‘எந்திரன்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மணிரத்னம் இயக்கி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஐஸ்வர்யா ராய் நடித்து வருகிறார்.