டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் கரோனா தொழில்நுட்பப் பிரிவு தலைவர் மரியா வான் கெர்கோவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதியாகும் விகிதம் குறைவு என்பதை நிரூபிக்க உலக சுகாதார அமைப்பிடம் போதிய புள்ளிவிவர ஆதாரங்களை இல்லை.

உலக நாடுகள் இன்னும் தங்கள் பகுதியில் ஒமைக்ரான் பரவல் பற்றிய தகவல்களை முழுமையாக அனுப்பவில்லை. அந்தத் தகவல்கள் குழப்பமானதாக உள்ளன. ஆகையால் இப்போதே டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல.

அதேபோல் தகவல்கள் கிடைக்கப் பெறாத ஆரம்ப நிலையில், ஒமைக்ரானால் மருத்துவமனைகளில் அனுமதியாகும் ஆபத்தும் குறைவு என்று உறுதியாகக் கூற இயலாது. அதனால் நாங்கள் உலக நாடுகள் ஒமைக்ரனை எச்சரிக்கையுடன் அணுகுமாறு கூறிவருகிறோம். மக்களும் கவனமாக இருக்க வேண்டும். பல நாடுகளில் இது கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்ட காலம் என்பதால் மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

தென் ஆப்பிரிக்க நாட்டின் தொற்று நோய்கள் தேசிய ஆராய்ச்சி மையம் ஒரு புதிய ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், மற்ற உருமாறிய கரோனா வைரஸ்களை ஒப்பிடும் போது ஒமைக்ரானால் மருத்துவமனையில் அனுமதியாகும் ஆபத்து 80% குறைவு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 4வது அலையில் ஒமைக்ரான் வைரஸால் பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்கர்களில் 80% பேருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்படாது. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சூழலுக்கு வரும் நோயாளிகளுக்கு மற்ற திரிபுகளால் ஏற்படும் ஆபத்திற்கு இணையான ஆபத்தும், அச்சுறுத்தலும் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலிலேயே, டெல்டாவை ஒப்பிடும்போது ஒமைக்ரான் வைரஸ் மிதமானது என இப்போதே சொல்வது சரியல்ல என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.