சிதம்பரம் நடராஜர் கோயில், தீட்சிதர்களின் சொந்த நிதியில் பராமரிக்கப்படுகிறதா என்று விளக்கம் கேட்டு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் தீட்சிதர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சொத்துகள் மற்றும் நகைகள் உள்ளிட்ட கணக்குகளை ஆய்வு செய்ய இந்து சமய அறநிலைய துறை அனுமதி கேட்ட போது, ‘இவ்வாறு கேட்க அறநிலையத் துறைக்கு அதிகாரம் இல்லை’ என்று கூறி, நடராஜர் கோயில் தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்தனர்.

அதன்பிறகு, கடந்த 2005-ம் ஆண்டு முதல் 2022 -ம் ஆண்டு வரைகணக்குகளை சரிபார்க்க ஒப்புதல் அளித்தனர். அதன் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் கொண்ட குழு, கடந்த சில நாட்களுக்கு முன் நடராஜர் கோயிலில் உள்ள சொத்து விவரங்கள் மற்றும் நகைகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடுத்த கட்டமாக, கடந்த1950-ம் ஆண்டு முதல் 2005-ம்ஆண்டு வரை உள்ள சொத்துகள் மற்றும் ஆபரணங்கள் கணக்கு களை ஆய்வு செய்ய அறநிலைய துறை கடிதம் அளித்தது. இதற்கு கோயில் தீட்சிதர்கள் மறுத்து விட்டனர். இந்த நிலையில், இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன் நடராஜர் கோயில் தீட்சிதர்களின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.

அதில், “நடராஜர் கோயில், தீட்சிதர்கள் சமுதாயத்தினால் மக்களின்பயன்பாட்டிற்காக கட்டப்பட்டதற் கான ஆதாரம். தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து கோயில் பராமரிக்கப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள், தீட்சிதர்களின் சொந்த நிதியில் இருந்து தினசரி பூஜை மற்றும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதற்கான ஆதாரங்கள்,

கோயிலில் பொதுமக்களிடமி ருந்து பல்வேறு முறையில் நன்கொடைகள் பெற்று தினசரி பூஜை மற்றும் பராமரிப்பு மேற் கொள்ளப்படுகிறது என்றால் அது குறித்த வரவு – செலவு கணக்குகள், கோயில் அமைந்துள்ள இடத்தின் நில உரிமை குறித்த வருவாய் துறை ஆவணங்கள், நில உரிமை இறைவன் பெயரில் இருப்பின் மேற்கண்ட நிலம் மன்னர்களால் அல்லது அரசால் இறைவனுக்கு வழங்கப்பட்டதா? அல்லது தீட்சிதர்களால் இறைவன் பெயரில் வழங்கப்பட்டதா? என்ப தற்கான ஆவணங்களை வரும் 15-ம்தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தவறும் பட்சத்தில் தங்களால் அளிக்கக் கூடிய விவரங்கள் எதுவும் இல்லை; அடிப்படை ஆவணங்கள் எதுவும் இன்றி ஊடகங்களில் தவறான தகவல்கள் தங்களால் அளிக்கப்பட்டு வருகிறது என முடிவு செய்யப்பட்டு, இந்து சமய அறநிலையத் துறை கொடைகள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்தக் கடிதத்தில் குறிப் பிடப்பட்டுள்ளது. ஆவணங்களை வரும் 15-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.