தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அலுவலகத்தில் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. தென் சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் தண்ணீர் தேங்கவில்லை. எனினும், வட சென்னை பகுதியில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக வில்லிவாக்கம், கொளத்தூர், தண்டையார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கியது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில் கொளத்தூர் தொகுதியில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலத்திற்கு முன்பு தண்ணீர் தேங்கி உள்ளதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்ஆர். சேகர் மற்றும் அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் ஆகியோர் டுவிட்டர் பக்கத்தில் படங்களை பதிவு செய்து இருந்தனர்.

மழைநீர் வடிகால் 4000 கோடி பேக்கேஜ். 10 வருஷமா சட்டமன்ற உறுப்பினர் இப்போ முதலமைச்சர். அவர் தொகுதி அலுவலகத்தின் நிலைமை நேற்றுவரை. மக்களை ஏமாற்றுவது என்றுதான் முடியுமோ. இதில் சென்னை 2.0 ஒரு வெத்து விளம்பரம் சுத்துது.

இந்நிலையில் தண்ணீர் தேங்கியுள்ளது போன்ற புகைப்படங்கள் பழையது என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ” சில நாட்களாக பெய்து வரும் மழையில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் சட்டமன்ற அலுவலத்தில் தண்ணீர் தேங்கவில்லை. தற்போது பகிரப்பட்டு வரும் புகைப்படம் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெள்ளம் ஏற்பட்டபோது எடுத்தது. படத்தில் உள்ளது போன்ற அலுவலகமே தற்போது இல்லை. பழைய அலுவலகம் தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது” இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.