சமீப காலமாக விண்வெளி சார்ந்த படிப்புகள் மாணவர்களைப் பெரிதும் ஈர்க்கும் ஒன்றாகவும் மாறியுள்ளன. அறிவியல் தொழில்நுட்பத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருக்கும் இன்றைய இளம் தலைமுறையினரிடம் விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த படிப்புகளைத் தேர்ந்தெடுக்கும் போக்கு அதிகரித்துவருகிறது.

விண்வெளி அறிவியல், விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றைப் பொறுத்தவரை, இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. புவி கண்காணிப்பு, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், வானிலை முன்னறிவிப்பு, தொலை மருத்துவம், சுற்றுச்சூழல், காலநிலை ஆய்வுகள், விவசாயம், உணவு ஆகியவற்றுக்கு இஸ்ரோவின் விண்வெளி ஆய்வுகள் பெரும் வலுசேர்த்து வருகின்றன. அந்தத் துறைகளின் சிறந்த திட்டமிடல், முடிவெடுத்தல் உள்ளிட்ட பல வளர்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்த விண்வெளி ஆய்வுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தரவுகளும், தகவல்களும் மிகவும் முக்கியமானவை.

டேஹ்ராடூனில் இருக்கும் இஸ்ரோவின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ரிமோட் சென்சிங் (ஐஐஆர்எஸ்), பள்ளி மாணவர்களுக்காக “விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் மேலோட்டம்” என்கிற தலைப்பில் அனைவருக்குமான ஓர் இணையவழி படிப்பை (MOOC) அறிவித்துள்ளது. விண்வெளி அறிவியல், தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்களைப் பற்றிய அறிவையும் விழிப்புணர்வையும் பள்ளி மாணவர்களுக்கு வழங்குவதே இந்த ஆன்லைன் பாடத்திட்டத்தின் நோக்கம். இந்த இணைய வகுப்பில் இந்தியாவின் புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர்கள் விண்வெளி தொழில்நுட்பம் குறித்து உரையாற்ற இருக்கின்றனர்.விண்வெளி தொழில்நுட்பத்தின் முக்கிய அம்சங்களையும், அதன் முழுவீச்சையும் இளம் தலைமுறையினர் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாக இது அமையும்.

இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இருக்கும் பள்ளி மாணவர்கள் இந்தப் படிப்பில் சேர்ந்து பயன்பெறலாம்.