“ஒரே பாகமாக எடுக்கலாம் என்றுதான் மணிரத்னம் நினைத்திருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து பேசிய பிறகு, அது இரண்டு பாகங்களாக எடுக்க முடிவானது. ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை எழுத மட்டுமே ஒரு வருடம் ஆனது” என்று ‘பொன்னியின் செல்வன் பாகம் 1’ அனுபவத்தைப் பகிர்கிறார் இயக்குநர் மணிரத்னத்துடன் இணைந்து ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையை எழுதிய நடிகரும், திரைக்கதை எழுத்தாளருமான இளங்கோ குமரவேல். அவருடனான பேட்டியிலிருந்து…

‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதையில் நீங்கள் இணைந்தது எப்படி? – ”நான் ஆரம்பகாலக்கட்டத்தில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை நாடகமாக அரங்கேற்றியிருக்கிறேன். அதன்மூலம் தான் இந்தப் படத்தில் திரைக்கதையை எழுதும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.”

படத்தின் திரைக்கதை எழுதும்போது, உங்களுக்கு ஒரு பார்வை இருந்திருக்கும். இயக்குநர் மணிரத்னத்துக்கும் ஒரு பார்வை இருந்திருக்கும். இரண்டு இணைத்த புள்ளி எது? – “அப்படி கிடையாது. முதலில் கல்கியின் பார்வை என்னவாக இருந்தது. அவருடைய கற்பனை என்னவாக இருந்தது என்பதை அறிந்து, அதை நாம் எப்படி கொண்டு வரப்போகிறோம், நம்முடைய திரைக்கதையின் வேகம் என்ன என்பதையெல்லாம் மணிரத்னம் தான் தீர்மானித்தார். பெரும்பாலும் எங்களுக்குள் அப்படி எதுவும் முரண்கள் இருந்தது கிடையாது. சேர்ந்த தான் நாங்கள் இதனைச் செய்தோம். அவர் என்னிடம் தெளிவாகச் சொல்லிவிட்டார். ‘உங்களுக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ, அதை நீங்கள் எழுதுங்கள். எனக்கு என்னவெல்லாம் தோன்றுகிறதோ அதை நான் எழுதுகிறேன். இறுதியில் இரண்டையும் சேர்த்து ஒன்றாக்கி முடிவு செய்வோம்’ என்றார். அப்படியான ஒரு ஆரோக்கியமான நடைமுறை தான் ‘பொன்னியின் செல்வன்’ திரைக்கதை எழுதும்போது நிகழ்ந்தது.”

பொன்னியின் செல்வன் திரைக்கதைக்கு நீங்கள் எடுத்துக்கொண்ட கால அளவு? – “2018 அக்டோபரில் இதனை தொடங்கினோம். ஒரே பாகமாக எடுக்கலாம் என்றுதான் அவர் நினைத்திருந்தார். நாங்கள் இருவரும் இணைந்து பேசிய பிறகு, அது இரண்டு பாகங்களாக எடுக்க முடிவானது. படத்தின் நீளம் குறித்து எனக்கு ஒரு கருத்து இருந்தது. அவருக்கு ஒரு கருத்து இருந்தது. பின்னர் இரண்டு பாகங்கள் எடுக்க திட்டமிட்டு, திரைக்கதை எழுத ஆரம்பித்தோம். திரைக்கதை எழுத மட்டுமே கிட்டத்தட்ட ஒரு வருட காலம் தேவைப்பட்டது. எழுதி முடித்துவிட்டு 2019-ம் ஆண்டு படப்பிடிப்புக்குச் சென்றோம். 2020-ல் கரோனா வந்தது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்துவிட்டோம்.

நாவலை சினிமாவுக்கான திரைக்கதையாக மாற்றும்போது என்னமாதிரியான சவால்களை எதிர்கொண்டீர்கள்? – “நாவலை நாம் எப்படி பார்க்கிறோம் என்பதில்தான் எல்லாமே அடங்கியிருக்கிறது. ஒரு நாவலை நாம் எந்தக் கோணத்தில் பார்க்கிறோம் என்ற பார்வையும், அந்த நாவலில் அதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன இருக்கின்றன என்ற தேடலும்தான் திரைக்கதைக்கான கட்டமைப்பை தீர்மானிக்கும். அதையொட்டிதான் திரைக்கதை அமைந்தது. சவால் என பார்த்தால், இதை திரைக்கதையாக்குவதே மிகப்பெரிய சவால்தான். ஆனாலும், அதையெல்லாம் கடந்து அதிலிருக்கும் விஷயங்களை ரசித்து செய்யும்போது அது சந்தோஷம்தான். இதை இப்படி மாற்றலாம் என்ற ஆர்வமும் கைகொடுக்கும். திரைக்கதைக்கு தேவையான எல்லா விஷயங்களும் அந்த நாவலிலிருந்துதான் எடுக்கப்பட்டது.”

படம் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த தருணத்தை எப்படி உணர்கிறீர்கள்? – “மிகவும் சந்தோஷமாக உள்ளது. மக்கள் பொன்னியின் செல்வன் படத்தை வரலாற்றுப் பதிவாக கருதி கொண்டாடுகிறார்கள். எல்லோருக்கும் படம் பிடித்திருக்கிறது. நான் இது நடக்க வேண்டும் என எதிர்பார்த்து ஆசைப்பட்டேன். நடக்குமா என்று எனக்குத் தெரியாது. ஆனால், நடக்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. படத்தைப் பார்த்துவிட்டு ஊரிலிருந்து என்னுடைய உறவுகள், நண்பர்கள் என அனைவரும் பாராட்டினார்கள்.”

படத்தில் குடந்தை ஜோதிடர் கதாபாத்திரம் காட்சிபடுத்தப்படவில்லையே? – “அதை நீங்கள் அப்படித்தான் எடுக்க முடியும். குடந்தை ஜோதிடரை வைத்து கல்கி என்ன சாதிக்க நினைத்தாரோ, அதை ஆழ்வார்க்கடியான் நம்பி சாதித்திருப்பார். என் நாடகங்களில் கூட நம்பியைத்தான் நான் குடந்தை ஜோதிடராக நடிக்க வைத்தேன். அது குறித்து கேட்டார்கள். ஆனால், பெரும்பான்மையான ரசிகர்கள், அதனை ஏற்றுக்கொண்டார்கள். நாவல் என்பது நீங்கள் படிக்கக்கூடிய மீடியம். அது வேறொரு மீடியத்திற்கு வரும்போது அதற்கென சில தேவைகள் இருக்கும். அதற்கான தேவைகளை நீங்கள் புரிந்துகொள்ளாமல் செய்தாலும் சரியாக வராது. பக்தியோடு அதை அணுகமுடியாது. சம்பந்தப்பட்ட ப்ளாட்டை ஸ்டேஜில் எப்படி கொண்டு வருகிறோம் என்பதுதான் முக்கியம். அதற்கு என்னுடைய மரபுக்கலைகளை நான் பயன்படுத்திக்கொண்டேன்.

நான் கற்றுக்கொண்ட தெருக்கூத்து, தேவராட்டம் இந்த மாதிரியான கலைகளைப் பயன்படுத்தி காட்சிப்படுத்தினேன். இப்படியாக மாற்றி 2014-ம் ஆண்டு மியூசிக் அகாடமியில் நான் எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாடகம் பெரிய வெற்றிபெற்றது. ப்ளாக்கில் டிக்கெட் விற்றார்கள். அந்த நாவலின் பாப்புலாரிட்டி அப்படி. ஆக, ஒரு நாவலின் ஜீவனை எப்படி வெளிக்காட்டுகிறோம் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டுமே தவிர, அதிலிருக்கும் வார்த்தைகளை சரியாக பிரட்டி போட்டோமா, இல்லையா என்பதல்ல முக்கியம்.”

வரலாற்றுப் புனைவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இளம் தலைமுறையினரில் பலரும் உண்மை வரலாறாக உள்வாங்கும் போக்கு குறித்து… – “உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கல்கியே ‘பொன்னியின் செல்வன்’ நாவலை புனைவு என்றுதான் கூறியிருக்கிறார். அதைத்தான் நாம் நம்ப வேண்டும். அதனால் இதுதான் வரலாறு என கருதி ‘பொன்னியின் செல்வனை’ நாம் அணுக முடியாது.”

உங்களின் அடுத்தடுத்த புராஜெக்ட்டுகள்? – “தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். இணையத் தொடர் ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கிறேன்; அமேசான் ப்ரைமில் விரைவில் வெளியாகும். அடுத்த மாதம் ஜெயமோகன் கதையில் உருவாகியுள்ள ‘ரத்ன சாட்சி’ ஆஹாவில் வெளியாக உள்ளது. நீலம் புரொடக்‌ஷனுடன் ஒரு படம் போய்கொண்டிருக்கிறது. ஹாட் ஸ்டாருக்கு ஒரு படம் என நடித்துக்கொண்டிருக்கிறேன்.”