ஜல்லிக்கட்டுப் போட்டிகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு கட்டுப்பாடுகளோடு நிச்சயமாக நடக்கும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதி அளித்துள்ளார்.

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி கூறியதாவது:

“ஜல்லிக்கட்டுப்போட்டிகள் கட்டுப்பாடுகளோடு நிச்சயமாக நடக்கும். கரோனா தொற்று பரவினாலும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு இந்த போட்டிகள் நடக்கும். கடந்த 2006ம் ஆண்டு 2011ம் ஆண்டு ஆட்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, மோசமான சூழ்நிலையில் இருந்த அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை முழுமையாக செயல்பட வைத்தார்.

அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு நிறைவான ஊதியமும், விவசாயிகளுக்கு கொள்முதல் விலையும் தடையில்லாமல் வழங்கி வந்தார். அதற்கு பின்னால் அதிமுக ஆட்சியில் கவனம் செலுத்தாமல் அந்த நிர்வாகம் சீர்கேட்டு சர்க்கரை ஆலை மூடப்பட்டது. 3 ஆண்டு காலம் ஆலையை மூடிவிட்டு தற்போது அதிமுக முன்னாள் அமைச்சர்களே ஆலையை திறக்க கோரிக்கை முன்வைக்கின்றனர்.

அந்த ஆலைக்கு தேவையான கரும்பு இருக்கும் பட்சத்தில் ஆய்வு செய்து திறக்கப்படும். ஆலை தனி அலுவலர், எந்தெந்த மாவட்டத்தில் கரும்பு இருப்பு இருக்கிறது என்று ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை தாக்கல் செய்தால் முதல்வர், வேளாண்மை அமைச்சர் கவனத்திற்கு கொண்டு ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.”
இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.