ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளில் ஜப்பான் தவறானதும், மிகவும் ஆபத்தானதுமான முடிவை முன்வைத்துள்ளது என்று வடகொரியா விமர்சித்துள்ளது.

ஜப்பான் சில நாட்களுக்கு முன்னர் தங்களது நாட்டின் பாதுகாப்பை இரட்டிப்பாக்குவது மற்றும் சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிப்பதற்கும் திட்டங்களை வகுப்பது குறித்து தெரிவித்தது. இதற்காக பெருமளவில் ராணுவத்திற்கு நிதி ஒதுக்கியிருக்கிறது ஜப்பான்.

இந்தச் சூழலில், ஜப்பானின் இந்த முன்னெடுப்புகளை வடகொரியா கடுமையாக விமர்சித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் கூறும்போது, “ஜப்பான் தவறானதும், மிகவும் ஆபத்தானதுமான முடிவை முன்வைத்துள்ளது. ஜப்பானின் இந்த முட்டாள்தனமான செயலை பொறுத்துக் கொள்ளவும் முடியாது. ஏற்றுக் கொள்ளவும் முடியாது. ஜப்பானை ஒருபுறம் தூண்டிவிட்டு, மறுபுறம் வடகொரியாவை கேள்வி கேட்க அமெரிக்காவுக்கு எந்த உரிமை இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை வடகொரியா இரு ஏவுகணை சோதனைகளை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், வடகொரியாவின் சமீபத்திய ஏவுகணை பரிசோதனைகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது.

ஜப்பானின் வலியுறுத்தலின்படி வடகொரியா மீது பொருளாதாரத் தடை விதிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை ஆயத்தமாகி வருகிறது. இதனிடையே, வடகொரியா மீது கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிக்க தென்கொரியாவும் தயாராகி வருகிறது. வடகொரியாவுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும், அந்நாடு தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், ஜப்பானை வடகொரியா விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.