கம்யூனிஸ்ட்களின் போராட்ட வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமே ‘ஜெய் பீம்’ திரைப்படம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துஉள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ‘ஜெய் பீம்’ திரைப்படக் குழுவினருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது.
‘ஜெய் பீம்’ திரைப்பட இயக்குநர் த.செ.ஞானவேல், ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர், கலை இயக்குநர் கதிர், இசையமைப்பாளர் சேன் ரோல்டன், ‘ஜெய் பீம்’ படத்தில் பங்களித்த மணிகண்டன், தமிழரசன், பவா செல்லத்துரை, இரா.காளீஸ்வரன், ‘ஜெய்பீம்’ உண்மை கதையில் தொடர்புடைய பார்வதி ராஜாக்கண்ணு, முதனை ஆர்.கோவிந்தன், ஆர்.ராஜ்மோகன், அ.சந்திரசேகரன் ஆகியோருக்கு மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் சால்வை, கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.
விழாவில் ஜி.ராமகிருஷ்ணன் பேசியதாவது: டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் மார்க்சிஸ்ட் அகில இந்திய தலைவர்கள் தமிழக அரசியல் நிலவரம் குறித்து விசாரிப்பார்கள். ஆனால், ‘ஜெய் பீம்’ படம் வெளிவந்த பிறகு நடைபெற்ற மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு கூட்டத்தில் ‘ஜெய் பீம்’ படத்தைப் பற்றியே அதிகம் விசாரித்தார்கள். அந்த அளவுக்கு இந்தப் படம் இந்திய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக மார்க்சிஸ்ட் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தில் ஒன்றுதான் இந்தப் படம். ‘ஜெய் பீம்’ படம் வெளியான பிறகு சில காட்சிகளை சுட்டிக்காட்டி பாமகஎதிர்த்தது. இந்தச் சூழ்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் கோரிக்கையை ஏற்று ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு ரூ. 15 லட்சத்தை நடிகர் சூர்யா வழங்கினார். கம்யூனிஸ்ட்களுக்கு போராட்டமே வாழ்க்கை.அந்தப் போராட்டத்தை ‘ஜெய் பீம்’ அங்கீகரித்துள்ளது. கம்யூனிஸ்ட்களின் போராட்ட வாழ்க்கைக்கு கிடைத்த அங்கீகாரமே இந்தப் படம். கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டங்களை இயக்குநர் ஞானவேல் தொடர்ந்து இயக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: ‘ஜெய் பீம்’ படக்குழுவினரின் பேச்சைக் கேட்கும்போது இடதுசாரி கருத்துகள் அவர்களிடம் எந்த அளவுக்குச் சென்றிருக்கிறது என்பதை உணர முடிகிறது. மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டத்தில் இறுதிவரைபோராடிய பார்வதியின் மன உறுதி பாராட்டுக்குரியது. இப்படிப்பட்ட போராளிகள் தமிழகத்தில். இருப்பது நமக்கு உத்வேகத்தை அளிக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டத்தில் வெற்றிபெறும் வரை மார்க்சிஸ்ட் கட்சியினர் உறுதியுடன் இருந்தார்கள். ஒட்டுமொத்த காவல் துறையையும் நாம் குறை சொல்லவில்லை. தவறு செய்த காவல் துறையினருக்கு தண்டனை பெற்றுத்தரவே போராடினோம்.
இயக்குநர் த.செ. ஞானவேல்: கலை கலைக்காக மட்டுமல்ல, கலைகள் மக்களுக்கானது என்பதை இடதுசாரி சிந்தனையாளர்கள் எங்களுக்கு உணர்த்தியிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் இயக்கத்தை முன்னிறுத்த வேண்டும்என்பதற்காக இந்தக் கதையை உருவாக்கவில்லை. ஆனால், இந்தப் படத்தை தொடங்கிய பிறகு அங்கு கம்யூனிஸ்ட் சிந்தனையாளர்களும், செயல்பாட்டாளர்களும் வந்து நின்றார்கள். இந்தப் படத்தில் காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் ஆகிய தலைவர்களை குறியீடாகக் காட்டியிருக்கிறோம். சிவப்பு, நீலம், கருப்பு இணைந்தால்தாம் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்.கதையைக் கேட்ட ஐந்தாவது நிமிடத்தில் படத்தை தயாரிக்கவும், நடிக்கவும் ஒப்புக் கொண்ட நடிகர் சூர்யாவுக்கு நன்றி.
‘ஜெய் பீம்’ உண்மை கதையில் தொடர்புடைய மார்க்சிஸ்ட் நிர்வாகி முதனை ஆர்.கோவிந்தன்: எனது 25 வயதில் காவல்துறையின் அடக்குமுறையால் ராஜாக்கண்ணு கொல்லப்பட்டார். இதனைக் கண்டித்து ஒரு பக்கம் மக்களைத் திரட்டி போராடினோம். மறுபக்கம் மார்க்சிஸ்ட் கட்சி உதவியுடன் சட்டப் போராட்டம் நடத்தினோம்.
பல்வேறு நெருக்கடிகள், மிரட்டல்கள், தடைகளைத் தாண்டி வழக்கில் வென்றோம். திருமணம் செய்து கொண்டால் மனைவியின் மூலம் மிரட்டல் விடுக்கப்படலாம். அதன் மூலம் இந்த வழக்கிலிருந்து விலக நேரிடும் என்று அஞ்சினேன். அதனால் இந்த வழக்கில் வென்ற பிறகு 39 வயதில்தான் திருமணம் செய்து கொண்டேன். மார்க்சிய தத்துவத்தில் வளர்ந்ததால்தான் இந்த அளவுக்கு உறுதியாக இருந்து இந்த வழக்கில் வெல்ல முடிந்தது. இந்த உண்மைச் சம்பவம் ‘ஜெய் பீம்’ படத்தில் அப்படியே தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் பேசினர்.
மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழுஉறுப்பினர் அ.பாக்கியம், ஆதவன் தீட்சண்யா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.