முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாளையொட்டி, ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்த்து, நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுகவின் நிரந்தரப் பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவின் 74-வது பிறந்த நாள் விழா வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஜெயலலிதாசிலைக்கு கட்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆகியோர் 24-ம் தேதிகாலை 10 மணிக்கு மாலை அணிவித்து, பிறந்த நாள் சிறப்பு மலரை வெளியிடுகின்றனர்.

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆடம்பர விழாக்களை தவிர்த்து, அவரவர் சக்திக்கேற்ப ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும்.

அதேபோல, ஜெயலலிதாவின் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்த வேண்டும். அன்னதானம், கண்தானம், ரத்த தானம், மருத்துவ முகாம்கள் நடத்துதல், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி, பரிசுவழங்குதல், இலவசத் திருமணம், ஆதரவற்றோர் இல்லங்களில் உணவு வழங்குதல், வேஷ்டி-சேலை வழங்குதல் உள்ளிட்டவற்றை செய்யவேண்டும்.