தகுதியுள்ள அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்க அரசு தயாராக உள்ளது என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட்மீது நடந்த விவாதம் வருமாறு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி (அதிமுக): திமுக அளித்த தேர்தல்வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக 5 பவுனுக்குகுறைவாக கூட்டுறவு வங்கியில் நகைகள் அடகு வைத்தவர்களுக்கு அந்த கடன் தள்ளுபடிசெய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி தள்ளுபடி வழங்கப்படவில்லை.
அமைச்சர் ஐ.பெரியசாமி: கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைகள் அடகு வைத்த 13.40 லட்சம் பேருக்கு ரூ.6 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதையடுத்து நகைக்கடன் தொடர்பாக ஆய்வு செய்ததில், போலி நகைகளை வைத்தும், வெறுமனே ஏட்டளவில் பதிவு செய்தும் நகைக் கடன் வாங்கி, அதே வங்கியில் நிரந்தர வைப்புத்தொகை வைத்திருந்தது, ஒரு குடும்பத்தை சேர்ந்த பலர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன் வாங்கியிருப்பது உட்பட பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை மட்டும் 97 ஆயிரம் பேருக்கு ரூ.375 கோடி நகைக் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. வரும் 31-ம் தேதிக்குள் தகுதியான அனைவரது நகைக் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டு, அவரவருக்கு நகைகள் திருப்பிவழங்கப்படும். 13.40 லட்சம் பேர் தள்ளுபடி பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இப்போது 14.60 லட்சம் பேர் நகைக் கடன் தள்ளுபடி பெறப் போகிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: கூட்டுறவு வங்கிகளில் 48 லட்சம் பேர் 5 பவுனுக்கும் குறைவான நகைகளை அடமானம் வைத்துள்ளனர். ஆனால், 13 லட்சம் பேருக்குதான் தள்ளுபடி செய்யப்படும் என்கிறீர்கள். திமுக தேர்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு குறைவாக நகைக் கடன் பெற்றவர்களின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்துள்ளீர்கள்.
முதல்வர் ஸ்டாலின்: நீங்கள் கூறுவது 100-க்கு 100 உண்மை. அதை ஏற்றுக் கொள்கிறேன். நகைக்கடன் தள்ளுபடி குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் விரிவாக சொல்லியுள்ளார். ‘திமுக ஆட்சிக்கு வந்துவிடும். நாமும் நகைக் கடன் தள்ளுபடி பெற வேண்டும்’ என்ற குறுகிய எண்ணத்தோடு நகைக்கடன் பெற்றுள்ளனர். அதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. தகுதியான யாருக்காவது நகைக்கடன் தள்ளுபடி கிடைக்காவிட்டால் அதுபற்றி சொல்லுங்கள். அவருக்கு உடனடியாக தள்ளுபடி வழங்க இந்த அரசு தயாராக இருக்கிறது. முறைகேடுகள் செய்து நகைக் கடன் பெற்றவருக்கு தள்ளுபடி தர வேண்டுமா?
அமைச்சர் பெரியசாமி: விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2 ஆயிரம் செலுத்தப்படும் என்றுமத்திய அரசு அறிவித்த திட்டத்தின்கீழ் பயன்பெற 15 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து இப்போது மத்திய அரசு வசூலித்துக் கொண்டிருக்கிறது. அதுபோன்ற நிலை ஏற்படக்கூடாது என்பதால்தான் நாங்கள் நகைக்கடன் பற்றி ஆய்வு செய்து தகுதியானவர்களுக்கு கடன் தள்ளுபடி வழங்கியுள்ளோம்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
முறைகேடுகள் செய்து நகைக் கடன் பெற்றவருக்கு தள்ளுபடி தர வேண்டுமா என்று முதல்வர் கேள்வி எழுப்பினார்.