புதுடெல்லி: மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேரை தேர்வு செய்யும் திட்டத்தை செயல்படுத்துமாறு பல்வேறு அரசுத் துறைகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.

அரசுத் துறைகள், மத்திய அரசின்

அமைச்சகங்களில் உள்ள மனிதவளம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக்குப் பின்னர் பிரதமர் மோடி இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் ட்விட்டரில் தகவல் பகிரப்பட்டுள்ளது.

 

 

 

எதிர்க்கட்சிகளின் பிரதான குற்றச்சாட்டு: பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளாகியும் நாட்டில் வேலையில்லா திண்டாட்டங்கள் குறையவில்லை என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் விமர்சித்துவரும் நிலையில் பிரதமரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. வரும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலிலும் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்புடன் பாஜக செயல்படத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் வேலைவாய்ப்பின்மை பேசுபொருளாகக் கூடாது என்பதற்காகவே இந்த மெகா வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் அறிவித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.