எதிர்வரும் 2023 முதல் மிகவும் புகழ்பெற்ற தங்கள் நிறுவனத்தின் டால்கம் பேபி பவுடர் விற்பனையை உலக அளவில் நிறுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம். அந்நிறுவனத்தின் டால்கம் பவுடர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளது அந்நிறுவனம்.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பன்னாட்டு மருந்து மற்றும் நுகர்வோர் சுகாதார பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வருகின்ற நிறுவனம்தான் ஜான்சன் அண்ட் ஜான்சன். கடந்த 136 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் தயாரிப்புகளில் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் டால்கம் பேபி பவுடர் உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற ஒன்றாக திகழ்கிறது. ஒரு காலத்தில் தாய்மார்களின் அமோக ஆதரவை பெற்ற தயாரிப்பு அது. அதனைதான் அடுத்த ஆண்டு முதல் விற்பனை செய்யப் போவதில்லை என ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது.

இந்த பவுடர் விற்பனையை அமெரிக்கா மற்றும் கனடாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னரே நிறுத்தியது ஜான்சன் அண்ட் ஜான்சன். டிமாண்ட் குறைவு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அப்போது அதற்கு காரணமாக அமைந்தது. இப்போது அதனை அப்படியே உலகம் முழுவதுக்குமானதாக அறிவித்துள்ளது.

விற்பனையை நிறுத்த காரணம் என்ன? – டால்கை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படும் பவுடரை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படுவதாக சொல்லி சுமார் 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நுகர்வோர்கள் வட அமெரிக்காவில் வழக்கு தொடுத்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தது ஜான்சன் அண்ட் ஜான்சன். அதே நேரத்தில் அது பாதுகாப்பானது என்றும், அது தொடர்பாக உலகம் முழுவதும் மருத்துவ வல்லுநர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகளுக்கு தங்கள் நிறுவனம் முழு ஆதரவு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. கடந்த 1894 முதல் இந்த டால்க் பேபி பவுடரை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

பாதுகாப்பானது? – நுகர்வோரின் விருப்பம், உலகளாவிய போர்ட்ஃபோலியோ மதிப்பீடு, தேவை போன்றவற்றை கருத்தில் கொண்டு டால்க் அடிப்படையில் தயாரிக்கப்படும் பவுடர் விற்பனையை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. இந்த பவுடர் விற்பனையை அந்நிறுவனம் நிறுத்தினாலும் இது பாதுகாப்பானது என்பதில் தங்களுக்கு மாற்று கருத்தில்லை எனவும் தெரிவித்துள்ளது.

மாற்று என்ன? – டால்கிற்கு மாற்றாக சோள மாவை அடிப்படையாக கொண்டு பேபி பவுடரை தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.