கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை முதல்வர் வெளியிட்டார்.

இதுகுறித்துத் தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

”தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (23.10.2021) தலைமைச் செயலகத்தில், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியால் கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் பெறப்பட்ட புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்களை வெளியிட்டார்.

தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்

புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதி / மாநிலம் / நாட்டில் பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைகளின்படி உற்பத்தி செய்யும் பொருட்களை பயன்படுத்துவதற்காகவும், சந்தைப்படுத்துவதற்காகவும் அப்பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதற்காக சட்டப்படி வழங்கப்படும் சான்றாகும்.

புவிசார் குறியீட்டின் மூலம் அப்பொருட்களுக்கான தரம், நற்பெயர் மற்றும் அடையாளம் காக்கப்படுகிறது. மேலும், அவ்வாறு புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டுமே உற்பத்தி செய்யவும், சந்தைப்படுத்தவும் வழிவகை செய்யப்படுகிறது. இதனால் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் தரம், பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் அதன் தொன்மை பேணி பாதுகாக்கப்படுகிறது. புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்றவற்றைத் தவிர பிறபகுதி / மாநிலம் / நாட்டில் உள்ளவர்கள் அப்பொருட்களை உற்பத்தி செய்யவோ, சந்தைப்படுத்தவோ சட்டப்படி இயலாது. இதன்மூலம் போலியாக உற்பத்தி செய்வதும் கள்ளச்சந்தையில் விற்பதும் கட்டுப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் தொடர் முயற்சியின் காரணமாக, கள்ளக்குறிச்சி மரச்சிற்பம், கருப்பூர் கலம்காரி ஓவியம், தஞ்சாவூர் நெட்டி வேலை மற்றும் அரும்பாவூர் மரச்சிற்பம் ஆகிய கைவினைப் பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவகம் மூலம் புவிசார் குறியீடு அங்கீகார சான்றிதழ்கள் பெறப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீட்டின் மூலம் தமிழக கைவினைஞர்கள் படைப்புகள் உலகளவில் கொண்டுச் சென்று சந்தைப் படுத்துவதற்கு வாய்ப்பாக அமையும்”. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.