மலையாள இயக்குநர் மகேஷ்நாராயணன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதனை இயக்குநர் மறுத்துள்ளார்.

‘விக்ரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். தற்போது அவர் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் பிஸியாக நடித்துவருகிறார். இதை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்திலும், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே அவர், மலையாள இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க இருந்தார். இதை கமல்ஹாசனே அறிவித்தும் இருந்தார். அந்தப் படம் ‘தேவர் மகன் 2’ எனவும் கூறப்பட்டது. அந்தப் படம் தொடங்குவதற்கு முன்பே நிறுத்தப்பட்டு விட்டதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் இந்த தகவலை இயக்குநர் மகேஷ்நாராயணன் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு அவர் அளித்த பேட்டியில், “இல்லை இல்லை, அது கிடப்பில் போடப்படவில்லை. இது கமல்ஹாசன் சாரின் ஸ்கிரிப்ட். தற்போது அவர் வேறு படங்களில் பிஸியாக இருக்கிறார். எனவே, படத்திற்கு தாமதமாகிறது. ஆனால், அது கிடப்பில் போடப்படவில்லை” என தெரிவித்துள்ளார்.