கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் வர உள்ளதை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சார யாத்திரையை காங்கிரஸ் கட்சி நாளை தொடங்குகிறது.

கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் தற்போது அம்மாநில அரசியலில் தேர்தல் பரபரப்பு அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் பிரச்சார யாத்திரையை நாளை தொடங்குகிறது. மக்களின் குரல் என்ற பெயரிலான இந்த யாத்திரை குறித்த விவரங்களை காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்தது. வட கர்நாடகாவில் உள்ள பெலகவியில் இந்த யாத்திரை தொடங்க உள்ளது.

கர்நாடக காங்கிரஸ் தலைவரான டி.கே.சிவகுமாரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான சித்தராமைய்யாவும் இணைந்து நாளை முதல் வரும் 29ம் தேதி வரை ஒரே பேருந்தில் பயணித்து இந்த பிரச்சார யாத்திரையை மேற்கொள்ள உள்ளனர். அதன் பிறகு இருவரும் தனித்தனியாக யாத்திரை மேற்கொள்வார்கள். டி.கே.சிவகுமார் கர்நாடகாவின் தென் பகுதியிலும், சித்தராமைய்யா வட பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்.

தேர்தல் பிரச்சார யாத்திரை தொடங்க உள்ள நிலையில், ஆளும் கட்சியான பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தயாரித்துள்ள குற்றப்பத்திரிகை இன்று வெளியிடப்பட்டது. மேலும், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய அம்சங்களை மக்கள் தெரிவிக்கும் வகையிலான இணையதளம் ஒன்றும் இன்று தொடங்கப்பட்டது. மேலும், இந்த யாத்திரைக்கான லோகோவும் இன்று வெளியிடப்பட்டது.

இந்த யாத்திரை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், ”இந்த யாத்திரை மக்களின் ஏக்கங்களை பேசுவதாக இருக்கும். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவின் தோல்விகள் குறித்தும், காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகள் குறித்தும் நாங்கள் எடுத்துக்கூறுவோம். மக்களின் ஆசீர்வாதத்தை நாடி இந்த யாத்திரையை நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைப்பதன் மூலம் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி மக்களிடம் கூறுவோம். பாஜக அரசின் ஊழல்கள், இவர்கள் பெறும் 40 சதவீத கமிஷன், அலிபாபாவும் 40 திருடர்களும் என்பதுபோல் இவர்கள் எவ்வாறு கொள்ளையடிக்கிறார்கள் என்பவை உள்பட அனைத்தையும் மக்கள் மத்தியில் முன்வைப்போம்.” என தெரிவித்தார்.

இதையடுத்துப் பேசிய சித்தராமைய்யா, ”கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை மிகவும் பலவீனமான முதல்வராக உள்ளார். கர்நாடகாவில் இதுவரை இருந்த முதல்வர்களில் இவரைப் போல பலவீனமானவர்கள் யாரும் இல்லை. மத்திய அமைச்சர்களைக் கண்டால் அச்சமடைபவராக இவர் இருக்கிறார். கர்நாடகாவுக்கு ரூ. 5,495 கோடி சிறப்பு நிதியாக அளிக்க 15வது நிதிக்குழு பரிந்துரை அளித்தது. ஆனால், அதை வழங்க நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறுத்துவிட்டார். அந்த நிதியைப் பெற துணிவில்லாதவராக பசவராஜ் பொம்மை உள்ளார்.

அதோடு, இந்த அரசு கடந்த 4 ஆண்டுகளில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்று மாநிலத்திற்கு மிகப் பெரிய கடன் சுமையை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவின் ஒவ்வொருவர் தலையிலும் ரூ. 83,000 கடன் சுமையை இந்த அரசு ஏற்றியுள்ளது. இப்படி இருந்தால் மாநிலம் எவ்வாறு முன்னேறும்?” என கேள்வி எழுப்பினார்.