திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களின் வெள்ளத்தில் மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, காவல் தெய்வமான துர்க்கை அம்மன் உற்சவத்துடன் நவ.24-ம் தேதி இரவு தொடங்கியது. பின்னர், அண்ணாமலையார் கோயிலில் மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக்கொடிமரத்தில் நவ.27-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர், பஞ்ச மூர்த்திகளின் 10 நாள் உற்சவம் ஆரம்பமானது. வெள்ளி வாகனம் உட்பட பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகளின் மாட வீதியுலா நடைபெற்றது. 6-ம் நாள் உற்சவமான நேற்று முன் தினம் 63 நாயன்மார்கள் மாட வீதியுலா மற்றும் வெள்ளி தேரோட்டம் நடைபெற்றது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. தேரடி வீதியில் நிலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஞ்ச ரதங்கள் அலங்கரிக்கப்பட்டன. பின்னர், தனித்தனி தேர்களில் சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர். அவர்களுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து, மகா தேரோட்டம் தொடங்கியது.

முதலில் விநாயகர் தேரும், பின்னர் வள்ளி, தெய்வானை சமேதராக முருகர் எழுந்தருளிய தேரும் வலம் வந்தன. இதைத்தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலையாரின் திருத்தேர் உற்சவம் பிற்பகல் 3.40 மணிக்கு தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, அண்ணாமலையார் திருத்தேர் மெல்ல மெல்ல அசைந்து, மாடவீதியில் வலம் வந்தது. அப்போது திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டு, திருத்தேர் மீது மலர்களை தூவி வணங்கி வரவேற்றனர்.

இதையடுத்து, பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுக்கும் பராசக்தி அம்மன் திருத்தேரோட்டம் மற்றும் சண்டிகேஸ்வரர் திருத்தேர் பவனி நடைபெற்றது. காலையில் தொடங்கிய பஞ்ச ரதங்களின் மகா தேரோட்டம் நள்ளிரவு வரை தொடர்ந்தது. மகா தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர். டிசம்பர் 6-ம் தேதி பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படவுள்ளன.

தேரோட்டத்தில் மழை: திருவண்ணாமலையில் மகா தேரோட்டம் நடைபெறும்போது மழை பெய்வது வழக்கம். நீர்துளிகள் மூலமாக அண்ணாமலையார் ஆசி வழங்குகிறார் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். அதன்படி, இந்தாண்டும் அண்ணாமலையாரின் திருத்தேர் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் மழை பெய்தது. அப்போது, மாட வீதியில் திரண்டிருந்த பக்தர்கள், அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர். விநாயகர் திருத்தேர், முருகர் திருத்தேர் பவனி வர தொடங்கியதில் இருந்து மழையை எதிர்பார்த்திருந்த பக்தர்களுக்கு, அண்ணாமலையாரின் திருத்தேர் பவனி வந்தபோது மழை பெய்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.