கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுகவினர் மாறி மாறி கோஷங்களை எழுப்பியும், செருப்பு, தண்ணீர் பாட்டில், கற்களை வீசியும் மாறி, மாறி தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூர் மாவட்ட ஊராட்சியில் மொத்தம் உள்ள 12 உறுப்பினர்களில் அதிமுக கூட்டணி 9, திமுக 3 இடங்களை பிடித்ததால் அதிமுகவைச் சேர்ந்த எம்.எஸ்.கண்ணதாசன் மாவட்ட ஊராட்சி தலைவராகவும், அதிமுகவைச் சேர்ந்த தானேஷ் என்கிற என்.முத்துகுமார் மாவட்ட ஊராட்சி துணை தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட ஊராட்சி துணைத் தலைவராக இருந்த தானேஷ் என்கிற என்.முத்துகுமார் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் பதவியை ராஜினாமா செய்ததால் மாவட்ட ஊராட்சி 8-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக வேட்பாளர் கண்ணையன் வெற்றி பெற்றார். இதனால் திமுகவின் பலம் 4-ஆக அதிகரித்தது. அதிமுக கூட்டணி பலம் 8-ஆக குறைந்தது.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் பதவிக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 22-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேர்தலன்று திமுக, அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் இருவர் திமுகவில் இணைந்ததால் திமுகவின் பலம் 6-ஆக அதிகரித்தது. .திமுக, அதிமுக சமபலத்தில் இருந்த நிலையில் 3 முறை உறுப்பினர்கள் யாரும் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் இன்று (டிச.19) அறிவிக்கப்பட்ட நிலையில் அதிமுக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடியது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தலை நடத்தவும், வாக்குகளை எண்ணவும் உத்தரவிட்டு, முடிவை அறிவிக்காமல் அதுதொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

தேர்தலையொட்டி ஏடிஎஸ்பி கண்ணன், டிஎஸ்பி தேவராஜ் தலைமையில ஏராளமான போலீஸார் மாவட்ட ஊராட்சி அலுவலகம் முன் திங்கட்கிழமை காலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் கார் கண்ணாடியை வேடசந்தூர் அருகே மர்ம நபர்கள் சேதப்படுத்தியதாகவும், அதிமுக மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ்.திருவிகவை கடத்தி விட்டதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்.பி.யிடம் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து திமுக, அதிமுக மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் வாக்களிக்க வந்த நிலையில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணைமேயர் சரவணன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்கு காரில் சென்றனர். அப்போது முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அங்கு திரண்டிருந்த அதிமுவினர் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் தவிர மற்றவர்களை உள்ளே அனுமதிக்கக்கூடாது எனக் கூறி அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிக்க திமுக, அதிமுகவினர் மாறி, மாறி கோஷங்களை எழுப்பினர். அதன்பிறகு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு செருப்புகள், தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசியும், நேரடியாகவும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். எஸ்.பி. சுந்தரவதனம் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். தொடர்ந்து கோஷங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.

கரூர் மாவட்டஊராட்சி துணைத்தலைவர்தேர்தலில் வாக்களித்துவிட்டு வந்த திமுக மாவட்ட ஊராட்சிக்குழுஉறுப்பினர்கள்

தேர்தலையொட்டி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்த நிலையில் திமுக உறுப்பினர்கள் நெடுங்கூர் கார்த்தி, கண்ணையன், தேன்மொழி, நந்தினிதேவி, நல்லமுத்து ஆகிய 6 பேர் வந்தனர். அதிமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் எம்.எஸ்.கண்ணதாசன், சிவானந்தம், ரமேஷ் உள்ளிட்ட 5 பேர் தேர்தலில் பங்கேற்றனர். எஸ்.திருவிக வரவில்லை. திமுக சார்பில் தேன்மொழியும், அதிமுக சார்பில் ரமேஷ் ஆகியோர் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நிலையில் 11 பேர் வாக்களித்தனர். 11 பேரின் வாக்குகளும் எண்ணப்பட்டன.

பின்னர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் நடைபெற்றது. இருவர் போட்டியிட்டனர். வாக்களித்தவர்கள் வாக்குகள் எண்ணப்பட்டன. இதுதொடர்பான அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்” என்றார்.