காஷ்மீர் பண்டிட்களின் துயரங்களை நாடு மறக்காது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘காஷ்மீர் பண்டிட் சகோதர, சகோதரிகளுக்கு என் அன்பையும் நல்லெண்ணத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் பண்டிட்களின் குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்தையும் வலியையும் நாடு மறக்காது. அவர்களுக்கு எனது பணிவான வணக்கங்களை தெரிவிக்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.

ஜம்முவில் உள்ள வைஷ்ணவிதேவி கோயிலுக்கு கடந்த வாரம் ராகுல்காந்தி சென்று தரிசனம் செய்தார். காஷ்மீரில் 20 ஆண்டுகளுக்கு முன் தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள் வெளிமாநிலங்களுக்கு அகதிகளாக சென்றனர். அவர்களை நினைவுகூரும் வகையில் பின்னர், ஜம்முவில் நடந்த கூட்டத்தில் ராகுல் பேசுகையில்,‘நானும் காஷ்மீர் பண்டிட்தான். அவர்களுக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. நான் அவர்களுக்காக ஏதாவது செய்வேன்’’ என்று கூறினார். ‘’காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் காஷ்மீர் பண்டிட்கள் உயிர் தப்ப வெளிமாநிலங்களுக்குச் சென்றனர். ராகுல் காந்தி அவர்களை வாக்குவங்கியாக பயன்படுத்துகிறார்’’ என்று பாஜக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.