“ஜம்மு காஷ்மீருக்கு நீதி வழங்கப்படும் வரை, அப்பாவிகளைக் குறிவைத்து தீவிரவாதிகள் கொல்வதைத் தடுத்து நிறுத்துவது இயலாத ஒன்று” என அம்மாநில முன்னாள் முதல்வரும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ஜம்முவில் உள்ள ஃபரூக் அப்துல்லாவின் வீட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை ஃபரூக் அப்துல்லா சந்தித்தார். அப்போது, புரான் கிரிஷன் பட் என்ற காஷ்மிரி பண்டிட் கடந்த சனிக்கிழமை சோபியான் என்ற இடத்தில் படுகொலை செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஃபரூக் அப்துல்லா, “நீதி வழங்கப்படும் வரை இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முடியாது. இதற்கு முன் படுகொலைகள் நிகழ்ந்தபோது சட்டப்பிரிவு 370 தான் காரணம் என கூறினார்கள். தற்போது அந்த சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும், இதுபோன்ற கொலைகளை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை? யார் இதற்குக் காரணம்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

சோபியானைச் சேர்ந்த புரான் கிரிஷன் பட் என்ற காஷ்மிரி பண்டிட், தனது பழத்தோட்டத்திற்கு சென்றுகொண்டிருந்தபோது தீவிரவாதிகளால் சுடப்பட்டார். பலத்த காயமடைந்த அவர், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்தத் தாக்குதலுக்கு காஷ்மீர் சுதந்திர போராட்டக்காரர்கள் என்ற தடை செய்யப்பட்ட அமைப்பு பொறுப்பேற்றது.

இந்தத் தாக்குதலுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. பாகிஸ்தான் மற்றும் தீவிரவாதிகளின் சதி வேலைகள் ஒருபோதும் வெற்றி பெறாது. காஷ்மிரி பண்டிட்டுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகள் ராணுவம் மற்றும் போலீசின் வலையில் சிக்குவார்கள் என பாஜக மாநிலத் தலைவர் ரவீந்தர் ரெய்னா தெரிவித்தார்.