கீழ்பவானி பாசன கால்வாய் சீரமைப்பு திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் ராமசாமி தாக்கல் செய்துள்ள மனுவில், “கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த 2020ஆம் ஆண்டு நபார்டு வங்கி நிதியுதவி மூலம் 933 கோடியே 10 லட்ச ரூபாயை ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த திட்டம் ஆறு கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு, கடந்த 2021ஆம் ஆண்டு பணிகள் துவங்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் காரணங்களால் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக கால்வாயில் பல இடங்களில் தொடர்ந்து உடைப்புகள் ஏற்பட்டு வருகிறது. தண்ணீர் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
நீர்வளத்துறை சீரமைப்பு வேலைகளை தொடங்குவதற்கு ஆயகட்டு பாசனத்தில் தொடர்பில்லாத சிலர் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் கீழ்பவானி ஆயகட்டு விவசாயிகளின் பாசன உரிமை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கீழ்பவானி பாசன திட்ட கால்வாய் சீரமைக்கும் பணியை விரைந்து சீர்செய்ய விவசாயிகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கை வைத்துள்ள நிலையில், சீரமைப்பு பணி முழுமையாக நிறைவடைந்தால் ஈரோடு, திருப்பூர், கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஏறத்தாழ இரண்டு லட்சம் ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் பலனடையும்.
2020 ஆம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணைப்படி கால்வாயை விரிவுபடுத்தி, சீரமைத்து, பாராமரித்து விவசாயிகளுக்கு பயனடையும் கையில் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்” இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார். இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.