இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் ‘கூ’ சமூக வலைதளம் பிரேசில் நாட்டில் அறிமுகமான 48 மணி நேரத்தில் சுமார் 10 லட்சம் மொபைல் அப்ளிகேஷன் டவுன்லோடுகளை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு சர்வதேச சந்தையில் முக்கியமான எழுச்சியாக பார்க்கப்படுகிறது.

கடந்த 2021 வாக்கில் இந்தியாவில் ட்விட்டருக்கு எதிரான கருத்துகள் எழுந்திருந்தது. அப்போது லைம்லைட்டுக்குள் வந்தது கூ. ட்விட்டரை போலவே இதிலும் பயனர்கள் பதிவுகளை பகிரலாம். கடந்த ஜனவரி முதல் இந்த தளத்தில் பயனர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவதாக அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் சொல்லியதை போலவே அண்மையில் 5 கோடி டவுன்லோடுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டி இருந்தது.

இப்போது போர்த்துகீசிய மொழியை சேர்த்து பிரேசில் நாட்டில் ‘கூ’ தளம் அண்மையில் அறிமுகமாகி இருந்தது. அறிமுகமான 48 மணி நேரத்தில் 10 லட்சம் டவுன்லோடுகளை ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆப் ஸ்டோரில் ‘கூ’ செயலி கடந்துள்ளது. இதனை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. பிரேசில் நாட்டில் பிரபலங்களும் இந்தத் தளத்தில் இணைந்துள்ளதாக தகவல். அந்த நாட்டில் பிரபல யூடியூபராக அறியப்படும் பெலிப் நெட்டோ அதிக பாலோயர்களை பெற்றுள்ளார். சுமார் 4.5 லட்சம் பேர் அவரை ‘கூ’ தளத்தில் மட்டும் பின்தொடர்ந்து வருகிறார்கள்.

“பிரேசில் நாட்டில் எங்கள் தளத்திற்கு கிடைத்துள்ள அமோக ஆதரவு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. அறிமுகமான சில மணி நேரங்களில் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்டு செயலிகளின் டவுன்லோடுகளில் ‘கூ’ டாப் லிஸ்டில் உள்ளது” என கூ இணை நிறுவனர் அப்ரமேயா ராதாகிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தி உள்ளார். அது முதலே நாள்தோறும் அந்நிறுவனம் குறித்த செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊழியர்கள் பணி நீக்கம், ப்ளூ டிக் வசதிக்கு கட்டண சந்தா போன்ற நடைமுறைகளுக்கு மத்தியில் அதன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த சூழலில் ‘கூ’ தளம் சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. தற்போது தமிழ் உட்பட 11 மொழிகளில் கூ இயங்கி வருகிறது.