புதுடெல்லி: கரோனாவுக்கான கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கரோனா நோய் தொற்றுக்காக நாடு முழுவதும் மக்களுக்கு கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. குறிப்பிட்ட இடைவெளியில் 2 டோஸ்கள் தடுப்பூசி போடப்படுகிறது. மேலும், 3-வது முறையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்படுகிறது.

இதில் கோவாக்சின் பூஸ்டர்டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் பாரத் பயோடெக் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

கரோனாவின் உருமாறிய வைரஸ்களான ஒமிக்ரான், டெல்டா ஆகியவற்றுக்கு எதிராக இரண்டு மூன்று டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை வெள்ளெலிகளுக்கு செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் மூலம் தடுப்பூசியின் செயல்திறனை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது.

கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியால் ஒமிக்ரான் வகைகளான பிஏ1.1, பிஏ2 ஆகிய வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

இரண்டு டோஸ் தடுப்பூசிக்குப் பிறகும் அதன் பின்னர், 3-வது முறையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்ட பிறகும் இருந்த நிலைகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில், 3 டோஸ் தடுப்பூசிக்குப் பின்னர் நுரையீரல் பாதிப்பின் தீவிரம் குறைந்து காணப்பட்டது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.