உத்தரப் பிரதேசம், லக்கிம்பூர் கெரியில் நடந்த கலவரத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக நீக்கக் கோரி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தலைமையிலான மூத்த தலைவர்கள் இன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் மனு அளித்தனர்.

உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் இரு நீதிபதிகளைக் கொண்டு பாரபட்சமற்ற வகையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் குழு கோரிக்கை வைத்தது.

கடந்த 3-ம் தேதி லக்கிம்பூர் கெரிக்கு மத்திய அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா, உ.பி. துணை முதல்வர் கேசப் பிரசாத் மவுரியா உள்ளிட்டோர் சென்றனர். அவர்களுக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டிய விவசாயிகளுக்கும், பாஜகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 4 விவசாயிகள், ஒரு பத்திரிகையாளர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்த விவகாரத்தில் உ.பி. போலீஸார் மத்திய அமைச்சர் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உள்பட 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டு 3 நாட்கள் போலீஸ் காவலில் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் லக்கிம்பூர் கலவரத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிட கடந்த 10-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் கடிதம் எழுதி நேரம் கேட்கப்பட்டது. இதன்படி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஏ.கே.அந்தோணி, குலாம் நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட பலர் சென்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை இன்று சந்தித்து மனு அளித்தனர்.

இந்தச் சந்திப்புக்குப் பின் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “லக்கிம்பூர் விவசாயிகள் கொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளதால், பாரபட்சமற்ற விசாரணை நடக்க அஜய் மிஸ்ரா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் எனக் குடியசுத் தலைவரிடம் தெரிவித்தோம்.

லக்கிம்பூர் கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் இரு நீதிபதிகளைக் கொண்டு பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தோம். மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவியிலிருந்து நீக்கப்படாதவரை, பாரபட்சமற்ற விசாரணை, நீதி பாதிக்கப்பட்டவர்களுக்குக் கிடைக்காது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் குடும்பத்தினரின் குரல் மட்டுமின்றி, ஒட்டுமொத்த விவசாயிகளின் குரலும் ஒடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்

பிரியங்கா காந்தி கூறுகையில், “இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு இன்றே கொண்டுசெல்வதாக குடியரசுத் தலைவர் எங்களிடம் தெரிவித்தார்” எனக் குறிப்பிட்டார்.

காங்கிரஸ் கட்சி அளித்த கோரிக்கை மனுவில், “லக்கிம்பூர் கலவரத்தில் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் பங்கு என்ன என்பது குறித்து இதுவரை விசாரிக்கப்படாததால், தொடர்ந்து பணியில் இருக்கிறார். மத்திய உள்துறை இணை அமைச்சராக, அதிகாரமிக்க பதவியில் ஒருவர் இருக்கும்போது அவரின் மகன் தொடர்பான வழக்கை எந்த போலீஸ் அதிகாரி நியாயமாக விசாரிக்க முடியும்?

இந்தச் சூழலில் அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலராக இருக்கும், குடியரசுத் தலைவரைச் சந்தித்து முறையிடுகிறோம். தன்னுடைய மகன் மீது குற்றச்சாட்டு பதிவாகி இருப்பதால், தார்மீக முறைப்படி உடனடியாக அமைச்சர் பதவியிலிருந்து அஜய் மிஸ்ரா விலக வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் பதவியில் இருக்கும் இரு நீதிபதிகளைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும்.

குடியரசுத் தலைவர், கோடிக்கணக்கான மக்கள் என லக்கிம்பூர் கெரியில் மன்னிக்க முடியாத வகையில், கருணையற்று விவசாயிகள் படுகொலை செய்யப்பட்டது ஆழமாக பாதித்துள்ளது. இந்தியாவின் ஆன்மா மீது தழும்பை ஏற்படுத்தியுள்ளது. இது திட்டமிட்ட பட்டப்பகலில் நடந்த படுகொலை”.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.