விருதுநகர்: சென்னையில் அதிமுக பிரமுகரிடமிருந்து ரூ. ஆயிரம் கோடி மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டதாக வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை அவர் அளித்த பேட்டியில், ”சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, கதீட்ரல் சாலையில் தமிழ்நாடு அரசு தோட்டக் கலை துறைக்கு சொந்தமான நிலம் 23 ஏக்கர் இருந்தது. கடந்த 1910ம் ஆண்டு தோட்டக்கலை சங்கத்திற்காக அரசு இந்த இடத்தை வழங்கியது. காலப்போக்கில் தோட்டக்கலை கிருஷ்ணமூர்த்தி என்ற அதிமுக பிரமுகர் கைக்குச் சென்றது. இந்த இடத்திற்கு பட்டா பெற்று அவர் ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்தார். இதை அறிந்த அப்போதைய முதல்வர் கருணாநிதி கடந்த 1989ம் ஆண்டு 17 ஏக்கர் நிலத்தை சட்டப்படி மீட்டார்.

ஆட்சி மாற்றத்திற்கு பின் மீதியுள்ள நிலத்தை மீட்க அதிமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது, முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்த சட்டப் போராட்டத்தால் மீதியுள்ள (115 கிரவுண்ட்) 6 ஏக்கர் நிலம் உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டுள்ளது. இதன் அரசு மதிப்பீடே ரூ.500 கோடிக்கு மேல் உள்ளது. சந்தை மதிப்பு ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். இந்த இடம் முழுவதுமாக அரச கையகப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வேளச்சேரியில் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 63 கிரவுண்ட் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்க தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு ஆக்கிரமிப்பு நிலங்கள் அனைத்தும் அரசால் மீட்கப்படும்” என்றார். மேலும், தமிழக முதல்வர் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் விமர்சனம் செய்தது குறித்து கேட்டபோது, “ஆளுநர் மரியாதைக்குரியவர். அவர் தகுதிக்கு சம்பந்தமில்லாத காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். ஆளுநர் அவருக்குரிய மரியாதையிலிருந்து விலகிப் போகிறார்” எனக் கூறினார்.